சேடபட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


சேடபட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Feb 2017 2:53 AM IST (Updated: 17 Feb 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

சேடபட்டி அருகே கீழத்திருமாணிக்கத்தில் பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி,

சாலைமறியல்

பேரையூர் தாலுகா சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கீழத்திருமாணிக்கம். இந்த கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக அருகிலுள்ள உள்ள விவசாய மோட்டார்களில் தண்ணீரை பிடித்து வந்தனர். அங்கேயும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், கிராம மக்களுக்கு முற்றிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதே ஊராட்சியை சேர்ந்த மேலத்திருமாணிக்கம் கிராமம் வரை கூட்டு குடிநீர் வருகிறது. ஆனால் கீழத்திருமாணிக்கம் கிராமத்திற்கு வருகிற குழாயில் மட்டும் கூட்டுகுடிநீர் வரவில்லை என்று இந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கைவிடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைத்தொடர்ந்து இந்த கீழத்திருமாணிக்கம் கிராம மக்கள் டி.ராமநாதபுரம்- சின்னக்கட்டளை செல்லும் சாலையில் முறையாக குடிநீர் வழங்க கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆய்வு நடவடிக்கை

தகவலறிந்து வந்த பேரையூர் தாசில்தார் சிவக்குமார், டி.ராமநாதபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்பு சேடபட்டி ஊராட்சி ஒன்றியஆணையாளர் முருகன் மற்றும் அதிகாரிகள் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க மாற்று ஏற்பாடு செய்து விரைவில் தீர்க்கப்படும் என தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து ஆதிதிராவிட காலனி மக்கள் தங்கள் பகுதியிலும் முற்றிலும் குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ளதாகவும், ஆழ்துளைக்கிணற்றில் தண்ணீர் இருந்தும், சரிவர இயக்கப்படாததால் தங்களது பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை என்று அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற ஆணையாளர் முருகன் அங்கு ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டார். பின்பு அங்குள்ள மின்மோட்டாரை சரி செய்து உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலருக்கு உத்தரவிட்டார். 

Next Story