தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் இலங்கை மர்ம படகு போலீசார் தீவிர விசாரணை


தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் இலங்கை மர்ம படகு போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 17 Feb 2017 4:15 AM IST (Updated: 17 Feb 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கை மர்ம படகை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரம்,

தகவல்

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி தென் கடல் பகுதியான கம்பிப்பாடு மற்றும் எம்.ஆர்.சத்திரம் கடற்கரைக்கு இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் இலங்கையை சேர்ந்த மர்ம படகு ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதாக கடலோர போலீசாரின் இலவச தொலைபேசி எண் 1093-க்கு அந்த வழியாக மீன் பிடித்து வந்த மீனவர்கள் செல்போன் மூலமாக தகவல் தெரிவித்து உள்ளனர்.

அதைத்தொடர்ந்து மண்டபம் கடலோர காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு தலைமையில் கடலோர போலீசார் மண்டபத்தில் இருந்து ஒரு ரோந்து படகில் அங்கு சென்று தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் இலங்கை மர்ம படகை கைப்பற்றி பார்வையிட்டனர். அந்த படகில் அதிவேக என்ஜின் ஒன்றும், ஒரு கேனில் மண்எண்ணெய்யும் இருந்தது. அதைத் தொடர்ந்து கடலோர போலீசார் அந்த படகை எம்.ஆர்.சத்திரம் கடற்கரை பகுதிக்கு கொண்டுவந்தனர்.

விசாரணை

தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இலங்கையை சேர்ந்த அந்த மர்ம படகில் ஆட்கள் யாரும் இல்லாததால் இலங்கையில் இருந்து கடத்தல்காரர்கள் இதில் தங்க கட்டிகளை கடத்தி வந்திருக்கலாம் எனவும், கரையோரம் வரையிலும் படகில் வந்தால் போலீசாரிடம் பிடிபடுவோம் என பயந்து படகை நடுக்கடல் பகுதியிலேயே நிறுத்தி விட்டு மீனவர்கள் போல தப்பிச்சென்று இருக்கலாம் என்று போலீசாருக்கும், உளவுப்பிரிவு போலீசாருக்கும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் கடலோர போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

Next Story