சீமைக்கருவேல மரங்களை 20-ந்தேதிக்குள் நில உரிமையாளர்கள் அகற்ற வேண்டும் நகராட்சி ஆணையர் உத்தரவு


சீமைக்கருவேல மரங்களை 20-ந்தேதிக்குள் நில உரிமையாளர்கள் அகற்ற வேண்டும் நகராட்சி ஆணையர் உத்தரவு
x
தினத்தந்தி 17 Feb 2017 4:15 AM IST (Updated: 17 Feb 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் பகுதியில் தங்களது நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை நில உரிமையாளர்கள் வருகிற 20-ந்தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று நகராட்சி ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

20-ந்தேதிக்குள்...

ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட கீழகுடியிருப்பு, மேலகுடியிருப்பு, கரடிகுளம், வேலாயுதநகர், மலங்கன் குடியிருப்பு, சின்னவளையம், செங்குந்தபுரம் உள்பட 21 வார்டுகளிலும் பல தனியார் இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. தங்களது நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை தாங்களே சொந்த செலவில் வருகிற 20-ந்தேதிக்குள் அகற்ற வேண்டும்.

மேலும் தாமதித்தாலோ அல்லது அகற்ற மறுத்தாலோ நகராட்சி நிர்வாகம் மூலம் அகற்றப்பட்டு அதற்கான செலவு தொகை இரட்டிப்பாக நிலத்தின் உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்படும். அரசு இடம் மற்றும் ஏரிக்கரைகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் நகராட்சி நிர்வாகத்தால் தற்போது அகற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தாசில்தார் பார்வையிட்டார்

ஜெயங்கொண்டம் பகுதியில் அரசு நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள். சேடர்குளம் ஏரியில் பொக்ளின் எந்திரம் மூலம் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது. அந்த பணியை தாசில்தார் திருமாறன் பார்வையிட்டார். அப்போது நகராட்சி பொறியாளர் புகழேந்தி, நகர வடிவமைப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

Next Story