திருச்சி அருகே தண்டவாளத்தில் கால்கள் துண்டான நிலையில் அரசு அதிகாரி பிணம்


திருச்சி அருகே தண்டவாளத்தில் கால்கள் துண்டான நிலையில் அரசு அதிகாரி பிணம்
x
தினத்தந்தி 17 Feb 2017 4:15 AM IST (Updated: 17 Feb 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே தண்டவாளத்தில் கால்கள் துண்டான நிலையில் அரசு அதிகாரி ஒருவர் இறந்து கிடந்தார். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

தண்டவாளத்தில் பிணம்

திருச்சி டவுன் ரெயில் நிலையத்துக்கும், பொன்மலை ரெயில் நிலையத்துக்கும் இடையே அரியமங்கலம் பால்பண்ணை ரெயில்வே மேம்பாலத்தின் கீழே உள்ள தண்டவாளத்தில் நேற்று காலை ஆண் ஒருவர் 2 கால்கள் துண்டான நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவலறிந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, ஏட்டு கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா சிவசக்தி நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தமோகனசுந்தரம் (வயது 52) என்பது தெரியவந்தது.

தவறி விழுந்து இறந்தாரா?

மோகனசுந்தரம் மயிலாடுதுறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் உதவி நிர்வாக பொறியாளராக பணியாற்றி வந்ததாகவும், கடந்த 3 நாட்களாக திருச்சி அலுவலத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டதும் தெரியவந்தது. அவருக்கு நேற்று சென்னையில் உள்ள அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு இருந்ததாகவும், அதில் கலந்து கொள்ள ரெயிலில் சென்னை செல்ல இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மோகனசுந்தரம் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில் ஏறி பயணம் செய்தபோது தவறி கீழே விழுந்து ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அந்த வழியாக தண்டவாளத்தை கடந்து சென்றபோது ரெயிலில் அடிபட்டு மோகனசுந்தரம் இறந்தாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story