மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி ராணுவ வீரர் உள்பட 3 பேர் பலி


மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி ராணுவ வீரர் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 17 Feb 2017 4:30 AM IST (Updated: 17 Feb 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் ராணுவ வீரர் உள்பட 3 பேர் பலியானார்கள்.

பழனிசெட்டிபட்டி,

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ராணுவ வீரர்

தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகரை சேர்ந்த வெங்கடேசன் மகன் குமார் (வயது 26). இவர் ராணுவ வீரராக அசாம் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து இருந்தார். அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் அருண்பாண்டி (18), ராஜேந்திரன் மகன் சூர்யா (20) ஆகிய இருவரும் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இவர்களும் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து இருந்தனர்.

ராணுவ வீரரான குமார் தேனியில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுப்பதற்காக நேற்று மோட்டார் சைக்கிளில் வந்தார். அவருடன் அருண்பாண்டி, சூர்யா ஆகியோரும் அதே மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். வங்கியில் பணம் எடுத்துவிட்டு 3 பேரும் போடிக்கு திரும்பிச் சென்று கொண்டு இருந்தனர்.

3 பேர் பலி

தேனி-போடி சாலையில் கோடாங்கிபட்டி அருகே ஒத்தவீடு பகுதியில் சென்ற போது, எதிரே மூணாறில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். இதில் ஒருவரின் தலை துண்டாகி தனியாக விழுந்தது.

மோட்டார் சைக்கிளில் மோதிய பஸ், சாலையோரம் இருந்த மாட்டு கொட்டகையில் புகுந்து, அதன் அருகே உள்ள மின்சார கம்பத்தில் மோதி நின்றது. இதில் மின்சார கம்பம் முறிந்து பஸ் மீது விழுந்தது. பஸ் மோதிய வேகத்தில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. விபத்தில், மாட்டு கொட்டகையில் கட்டப்பட்டு இருந்த ஒரு மாடும் காயம் அடைந்தது.

வழக்குப்பதிவு

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை தொடர்ந்து பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

பஸ்சில் வந்த பயணிகள் சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. விபத்தை தொடர்ந்து பயணிகள் அனைவரும் இறங்கி, அந்த வழியாக வந்த வேறு பஸ்களில் ஏறிச் சென்று விட்டனர். இதற்கிடையே தப்பி ஓடிய பஸ் டிரைவரான, பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த அருள் (37) என்பவர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த கோர விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 3 பேர் இறந்த சம்பவம் போடி சுப்புராஜ் நகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story