கள்ளக்காதலனை திருமணம் செய்ய இடையூறாக இருந்த குழந்தையை கழுத்தை இறுக்கி கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை


கள்ளக்காதலனை திருமணம் செய்ய இடையூறாக இருந்த குழந்தையை கழுத்தை இறுக்கி கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 17 Feb 2017 4:30 AM IST (Updated: 17 Feb 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலனை திருமணம் செய்ய இடையூறாக இருந்த குழந்தையை கழுத்தை இறுக்கி கொன்ற பெண்ணுக்கு கோவை கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

கோவை,

ஜவுளிக்கடை ஊழியரின் மனைவி

நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 32). கோவையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி திவ்யா (22). இவர்களுடைய 3 வயது மகள் ஹரிவர்ஷா. திருமணம் ஆனதில் இருந்து கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. கணவரிடம் வாழ பிடிக்கவில்லை என்று கூறி திவ்யா, செல்வபுரம் இந்திரா நகரில் உள்ள தாய் பார்வதி வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார். கணவர் அரவிந்த்குமார் தனியாக வசித்து வந்தார்.

கள்ளக்காதல்

இந்தநிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு கோல்டுகவரிங் கடையில் ஊழியராக வேலை செய்து வந்த கார்த்திக் என்பவருடன் திவ்யாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றித்திரிந்தனர். இதுபற்றி அறிந்ததும் கணவர் அரவிந்த்குமார், திவ்யாவின் தாய் பார்வதி ஆகியோர் கண்டித்தனர். ஆனால் திவ்யா, கார்த்திக்குடன் தொடர்பை நிறுத்தவில்லை. இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பார்த்து தாய் பார்வதி மகளை தொடர்ந்து கண்டித்து வந்தார். குழந்தையின் நலன் கருதி கணவருடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறியும் அதனை திவ்யா கேட்கவில்லை.

இந்த நிலையில் கார்த்திக்கிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு திவ்யா கூறினார். குழந்தையுடன் இருப்பதால் தனது பெற்றோர் திருமணத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கார்த்திக் தெரிவித்தார். கள்ளக்காதலனை திருமணம் செய்ய குழந்தை ஹரிவர்ஷா இடையூறாக இருப்பதாக திவ்யா கருதினார்.

கழுத்தை இறுக்கி கொலை

இந்தநிலையில் கடந்த 3.6.2016 அன்று குழந்தை ஹரிவர்ஷா மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தாள். இதுபற்றிய தகவல் அறிந்ததும் செல்வபுரம் போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாய் திவ்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார்.

பிரேத பரிசோதனையில், குழந்தையின் கழுத்துப்பகுதியில் துணியால் இறுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திவ்யாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, சுடிதார் துப்பட்டாவால் குழந்தையின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும், கள்ளக்காதலனை திருமணம் செய்யவும், கள்ளக்காதலுக்கு இடையூறாகவும் இருந்ததால் குழந்தையை கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். இதைத்தொடர்ந்து திவ்யாவை போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு கள்ளக்காதலன் கார்த்திக்கிற்கு தொடர்பு இல்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை கோவை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. குழந்தையை கொன்ற திவ்யாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அகஸ்டஸ் ஆஜராகி வாதாடினார்.

கொலை நடைபெற்று 8 மாதங்களுக்குள் இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கிற்கு தேவையான சாட்சியங்களை உடனடியாக கோர்ட்டில் தாக்கல் செய்யவும், போலீஸ்தரப்பில் விசாரணையை துரிதப்படுத்தவும் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தேவையான நடவடிக்கை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தீர்ப்புக்கு பின் திவ்யாவை போலீசார் கோவை சிறையில் அடைத்தனர். 

Next Story