அமித்ஷாவின் சொத்து மதிப்பை வெளியிட தைரியம் இருக்கிறதா? பா.ஜனதாவுக்கு சிவசேனா சவால்
‘‘அமித்ஷாவின் சொத்து மதிப்பை வெளியிட தைரியம் இருக்கிறதா?’’ என்று பா.ஜனதாவுக்கு சிவசேனா சவால் விடுத்தது.
மும்பை,
‘‘அமித்ஷாவின் சொத்து மதிப்பை வெளியிட தைரியம் இருக்கிறதா?’’ என்று பா.ஜனதாவுக்கு சிவசேனா சவால் விடுத்தது.
தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டுசிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தன்னுடைய சொத்து மதிப்பை வெளியிட வேண்டும் என்றும், ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற கொள்கையை காரணம் காட்டி, சிவசேனா செல்வ செழிப்பில் திளைப்பதாகவும் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சமீபத்தில் குற்றம்சாட்டினார். இதற்கு சிவசேனா எம்.பி. ராகுல் செவாலே நேற்று கண்டனம் தெரிவித்து மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
உத்தவ் தாக்கரே மீதும், மற்ற சிவசேனா தலைவர்கள் மீதும் பாரதீய ஜனதா ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு முன்பு, அமித்ஷா உள்ளிட்ட பாரதீய ஜனதா தேசிய தலைவர்களின் சொத்து மதிப்பை வெளியிட பிரதமர் மோடிக்கு தைரியம் இருக்கிறதா?.
ஆதாரத்தோடு பேசுங்கள்மத்தியிலும், மராட்டியத்தில் பா.ஜனதா அரசு தான் இருக்கிறது. பா.ஜனதாவுக்கு தைரியம் இருந்தால், உத்தவ் தாக்கரேயின் சொத்து மற்றும் நிதி நிலவரம் பற்றி விசாரணை நடத்தட்டும். முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முதலில் ஆதாரத்தோடு பேச வேண்டும். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் மூலம், தோல்வியை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இவ்வாறு ராகுல் ஷெவாலே எம்.பி. தெரிவித்தார்.
பா.ஜனதா பதிலடிசிவசேனாவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் மாதவ் பண்டாரி, ‘‘2012–ம் ஆண்டு தேர்தலின்போது அமித்ஷா தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தை சிவசேனா மறந்துவிட்டதாக தெரிகிறது. அது ஏற்கனவே பொதுமன்றத்தில் இருக்கிறது. இல்லை என்றால், மீண்டும் ஒரு முறை அந்த பிரமாணப்பத்திரத்தை வெளியிட்டு சிவசேனாவின் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றுவோம்’’ என்றார்.
அத்துடன், உத்தவ் தாக்கரே சொத்து விவரம் பற்றி விசாரணை நடத்துவோம் என்ற நாங்கள் கூறவில்லை என்று தெரிவித்த அவர், விசாரணை நடத்துமாறு சிவசேனா எங்களை நிர்ப்பந்தித்து விட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.