பா.ஜனதா பிடியில் இருந்து நாக்பூரை பாதுகாக்க வேண்டும் தேவேந்திர பட்னாவிஸ் மீது சிவசேனா காட்டம்


பா.ஜனதா பிடியில் இருந்து நாக்பூரை பாதுகாக்க வேண்டும் தேவேந்திர பட்னாவிஸ் மீது சிவசேனா காட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2017 3:05 AM IST (Updated: 17 Feb 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

‘‘பா.ஜனதா பிடியில் இருந்து நாக்பூரை பாதுகாக்க வேண்டும்’’ என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

மும்பை,

‘‘பா.ஜனதா பிடியில் இருந்து நாக்பூரை பாதுகாக்க வேண்டும்’’ என்று சிவசேனா தெரிவித்துள்ளது.

மும்பை– பாட்னா ஒப்பீடு

சிவசேனா கட்டுப்பாட்டில் இருக்கும் மும்பை மாநகராட்சியை பீகார் தலைநகர் பாட்னாவுடன் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சமீபத்தில் ஒப்பிட்டு பேசினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சிவசேனா, அக்கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வில், பாரதீய ஜனதா கட்டுப்பாட்டில் உள்ள நாக்பூர் மாநகராட்சியை பாதுகாக்க வேண்டும் என்று நேற்று குறிப்பிட்டது.

இதுபற்றி அதில் மேலும் கூறி இருப்பதாவது:–

முதல்–மந்திரியின் சொந்த நகரமான நாக்பூர் சின்னாபின்னாமாகி கிடக்கும் அதே நேரத்தில், அவரும், அவரது கட்சியினரும் மும்பை மற்றும் புனே மீது குறிவைக்கின்றனர். மும்பையை பாட்னாவுடன் ஒப்பிடும் அதேவேளையில், நாக்பூர் சர்வதேச குற்ற தலைநகராக மாறிவிட்டதா? என்ற கேள்விக்கு தேவேந்திர பட்னாவிஸ் முதலில் பதிலளிக்கட்டும்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

சமீபத்தில் நாக்பூர் மாநகராட்சி டெங்கு காய்ச்சலின் கோரப்பிடியில் இருந்தது. அப்போது, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க பா.ஜனதா தலைமையிலான மாநகராட்சியால் முடியவில்லை. அதேசமயம் மும்பையில் டெங்கு காய்ச்சலை தடுக்க சிவசேனா தலைமையிலான மாநகராட்சி, போதுமான ஏற்பாடுகளை செய்தது.

நாக்பூரில் சட்டவிரோத கட்டிடங்கள் பெருகுகின்றன. நகரம் முழுவதும் சாலைகளில் குழி தோண்டப்படுவதால், ஏராளமானோர் தவறி விழுந்து உயிர் இழக்கின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஆகியவை அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. சூரியன் மறைந்த பிறகு பெண்கள் வெளியில் செல்ல பயப்படுகின்றனர்.

சிகாகோ போன்று...

முதல்–மந்திரி இதை எல்லாம் பார்க்காமல் மும்பையை பாட்னாவுடன் ஒப்பிடுகிறார். முதல்–மந்திரியும், அவரது மந்திரிகளும் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். நாக்பூர் போன்ற நகரங்கள் சிகாகோ போன்று மாறுவதற்கு முன்பு, அவற்றை பா.ஜனதாவின் முதலை தாடையில் இருந்து பாதுகாக்க வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்தது.

இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.


Next Story