விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.37¼ லட்சம் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது
வெளிநாட்டில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.37¼ லட்சம் மதிப்பிலான தங்கம், வெளிநாட்டு பணம் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை,
வெளிநாட்டில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.37¼ லட்சம் மதிப்பிலான தங்கம், வெளிநாட்டு பணம் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யயப்பட்டனர்.
தங்கம் கடத்தல்மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று பாங்காக்கில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணி ஒருவரை சந்தேகத்தின்பேரில் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இந்த சோதனையில் அவர் தனது உடைமையில் மறைத்து கடத்தி வந்த 2 தங்கக்கட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் ஆகாஷ்குமார் மகாஜனி(வயது35) என்பது தெரியவந்தது.
அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.8 லட்சத்து 19 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெண்கள் கைதுஇதேபோல பாங்காக்கில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்திறங்கிய 2 பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவர்கள் கடத்தி வந்த 100 கிராம் எடையுள்ள 4 தங்கக்கட்டிகள், 25 கிராம் எடையுள்ள 2 தங்கக்கட்டிகள் சிக்கின. இதையடுத்து தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பெண்களையும் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மும்பையை சேர்ந்த சலோச்சனா கேஷ்வாணி, மோகினி லால்வானி என்பது தெரியவந்தது அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.13 லட்சத்து 65 ஆயிரம் ஆகும்.
மற்றொரு சம்பவத்தில் துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய முகமது ஆசீம் என்ற பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த அமெரிக்க டாலர், திர்ஹாம் என்று இந்திய மதிப்புள்ள ரூ.15 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர் கைது செய்யப்பட்டார்.