ரூ.1 லட்சத்துக்கான 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் 3 பேர் கைது


ரூ.1 லட்சத்துக்கான 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2017 3:37 AM IST (Updated: 17 Feb 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1 லட்சத்துக்கான 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

மும்பை,

ரூ.1 லட்சத்துக்கான 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டு

மும்பை கோவண்டி பகுதியில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு வந்த ஒருவர் பழ வியாபாரியிடம் 2 கிலோ திராட்சை பழம் வாங்கிவிட்டு தன்னிடம் இருந்த ரூ.2 ஆயிரம் புதிய நோட்டை கொடுத்து உள்ளார். இதனை வாங்கி பார்த்தபோது, அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.

இதனால் சுதாரித்துக்கொண்ட வியாபாரி சில்லரை மாற்றி வருவதாக கூறிவிட்டு வெளியே வந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து சோதனையிட்டனர்.

3 பேர் கைது

இந்த சோதனையில் அவரிடம் ரூ.1 லட்சத்துக்கான 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவரது பெயர் வாசுதேவ் அச்ரேக்கர் என்பது தெரியவந்தது. தான் பள்ளிக்கூட பஸ் டிரைவர் என்று போலீசாரிடம் தெரிவித்தார். 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடும்படி தன்னிடம் ராஜூவ் ஜாதவ், ஜூத்து ஆகிய 2 பேர் கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது அந்த நோட்டுகளை தங்களிடம் திரைப்படத்துறையை சேர்ந்த ஒருவர் கொடுத்ததாக தெரிவித்தனர். கைதான 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story