சாத்தான்குளம் அருகே பரிதாபம் மகள் இறந்த அதிர்ச்சியில் தந்தை சாவு


சாத்தான்குளம் அருகே பரிதாபம் மகள் இறந்த அதிர்ச்சியில் தந்தை சாவு
x
தினத்தந்தி 18 Feb 2017 1:15 AM IST (Updated: 18 Feb 2017 12:11 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே மகள் இறந்த அதிர்ச்சியில் தந்தை உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம்,

சாத்தான்குளம் அருகே மகள் இறந்த அதிர்ச்சியில் தந்தை உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

6–ம் வகுப்பு மாணவி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே புதுக்குளம் பஞ்சாயத்து வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது 45). இவர் புதுக்குளம் பஞ்சாயத்தில் தற்காலிக குடிநீர் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஜெயா. இவர்களுடைய மகள் ஜெயமேரி (12). இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 6–ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயமேரிக்கு திடீரென்று காய்ச்சல் மற்றும் வலிப்பு ஏற்பட்டது. உடனே சிறுமியை, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலையில் ஜெயமேரி பரிதாபமாக உயிரிழந்தாள்.

அதிர்ச்சியில் சாவு

மகள் இறந்தது குறித்து ஜெயா, செல்போனில் தன்னுடைய கணவருக்கு தெரிவித்தார். இதனை கேட்ட தங்கத்துரை அதிர்ச்சியில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இறந்த தங்கத்துரை, ஜெயமேரி ஆகியோரின் உடல்களை உறவினர்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். அங்கு அருகருகே இருவரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன.

மகள் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story