இ–சேவை மையங்களில் புதிய வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக பெற ஏற்பாடு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இ–சேவை மையங்களில் வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக பெற்று கொள்ளலாம், என மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இ–சேவை மையங்களில் வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக பெற்று கொள்ளலாம், என மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது;–
வாக்காளர்கள்தூத்துக்குடி மாவட்டத்தில் 1.1.2017–ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, 1.9.2016 முதல் 30.9.2016 முடிய வாக்காளர் பட்டியல்–2016–ல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்யப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் பெயர் சேர்க்க 32 ஆயிரத்து 291 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 29 ஆயிரத்து 933 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர்.
கடந்த 2016–ம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது புகைப்பட அடையாள அட்டை, ஒப்பந்தக்காரர்கள் மூலம் அச்சடிக்கப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.
இ–சேவை மையம்தற்போது, புதிய வாக்காளர்களுக்கு மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி. மூலம் நிர்வகிக்கப்படும் இ–சேவை மையங்கள் மூலம், வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வாக்காளராக பெயர் சேர்க்க கொடுத்த விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர்கள் கொடுத்த செல்போன் எண்ணுக்கு தனிப்பட்ட அடையாள எண் கொண்ட ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அந்த அடையாள எண்ணை, தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ–சேவை மையங்களில் காண்பித்து, வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக பெற்று கொள்ளலாம், என அவர் தெரிவித்துள்ளார்.