வீராணம் ஏரியின் நீர்மட்டம் 39 அடியாக குறைந்தது


வீராணம் ஏரியின் நீர்மட்டம் 39 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 18 Feb 2017 3:45 AM IST (Updated: 18 Feb 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

வீராணம் ஏரியின் நீர்மட்டம் 39 அடியாக குறைந்துள்ளதால், சென்னைக்கு குடிநீர் அனுப்புவது எந்த நேரத்திலும் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

வீராணம் ஏரி

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 16 கிலோ மீட்டர் நீளம், 5.6 கிலோ மீட்டர் அகலம், 48 கிலோ மீட்டர் சுற்றளவு என பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். மேலும் வீராணம் ஏரியில் உள்ள 34 மதகுகள் வழியாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமின்றி சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதும் இந்த ஏரிதான். அதாவது வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு தினமும் வினாடிக்கு 76 கனஅடி நீர் கொண்டு செல்லப்பட்டு, நகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

ரூ.40 கோடியில் தூர்வாரும் பணி

ஏரி வெட்டப்பட்ட காலத்தில் 1.44 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டது. தற்போது ஏரி தூர்ந்து போய் அதன் கொள்ளளவு வெறும் 0.96 டி.எம்.சி.யாக உள்ளது. வீராணம் ஏரி தூர்ந்து கிடப்பதால், கூடுதலாக தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை, மழைக்காலத்தில் மழைநீர் வீணாக கடலுக்கு செல்வதாகவும், இதனை தடுக்க ஏரியை தூர்வார வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி வீராணம் ஏரியை தூர்வார கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு ரூ.40 கோடி ஒதுக்கியது. இதையடுத்து வீராணம் ஏரியை தூர்வாரும் பணி முழுவீச்சில் நடைபெற்றது.

நீர்மட்டம் 43.50 அடி

இந்த நிலையில், வீராணம் ஏரிக்கு தண்ணீர் தேவைப்படுவதால் தூர்வாரும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கீழணையில் இருந்து ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏரியின் நீர்மட்டம் 43.50 அடியை எட்டியது. கீழணையில் தண்ணீரின் அளவு குறைந்ததால் அதற்கு மேல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடமுடியவில்லை. இந்த நிலையில் கடலூர் மாவட்ட டெல்டா பகுதியான காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதி விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் நடப்பு ஆண்டு பருவமழையும் பொய்த்து போனது. இதன் காரணமாக விளைநிலங்களில் பயிர்கள் அனைத்தும் கருகின.

குட்டைபோல் காட்சி அளிக்கிறது

இதற்கிடையே சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு ஏற்ப தினமும் சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. வீராணம் ஏரியின் நீர் மட்டம் நேற்று 39 அடியாக குறைந்து உள்ளது. இதனால் கடல்போல் காட்சி அளிக்கும் வீராணம் ஏரி குட்டைபோல் காட்சி அளிக்கிறது. நீர்பிடிப்பு பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் ஆடு, மாடுகளை சிலர் மேய்ச்சலுக்காக ஏரியில் விட்டுள்ளனர். ஏரியில் மீன்பிடிக்க குத்தகை எடுத்திருந்தவர்களும், அதில் மீன்பிடிக்க தொடங்கியுள்ளனர்.

இன்று அல்லது நாளை நிறுத்தம்

ஏரியின் நீர்மட்டம் 43.50 அடியாக இருந்தபோது சென்னைக்கு வினாடிக்கு 76 கன அடி வீதம் குடிநீர் அனுப்பப்பட்டது. நீர்மட்டம் குறைய, குறைய ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் குறைக்கப்பட்டது. அதாவது நேற்று வினாடிக்கு 14 கன அடி வீதம் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டது. ஏரியின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் 39 அடியாக குறைந்ததும், சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்படும். தற்போது ஏரியின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் குறைந்த அளவு குடிநீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இன்று(சனிக்கிழமை) அல்லது நாளைக்குள்(ஞாயிற்றுக் கிழமை) சென்னைக்கு குடிநீர் அனுப்புவது எந்த நேரத்திலும் நிறுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது என்றார். 

Next Story