தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாநில வினாடி–வினா போட்டி திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்பு
தூத்துக்குடியில் நேற்று மாநில அளவில் நடைபெற்ற வினாடி– வினா போட்டியில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நேற்று மாநில அளவில் நடைபெற்ற வினாடி– வினா போட்டியில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
வினாடி– வினாகல்பாக்கம் இந்திரா காந்தி அணுமின் நிலையம் சார்பில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஒரு நாள் வினாடி–வினா போட்டி நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ஹெலன் ப்ளோரா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மூத்த விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டார். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சார்ந்த அதிகாரிகள் தேவநாதன் மற்றும் சந்திரசேகர் செய்திருந்தனர்.
கண்காட்சிநிகழ்ச்சியில் இந்திரா காந்தி அணுமின் நிலைய தொழில்நுட்ப அலுவலர் ஜலசா மதன் மோகன் அணுசக்தி பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய அச்சத்தைப் போக்கும் விதமாக இந்த போட்டியானது நடத்தப்படுகிறது என்பதை மாணவர்களிடையே எடுத்துரைத்தார். இதனை வலியுறுத்தும் விதமாக அணுஉலையின் மாதிரிகள் மற்றும் பதாகைகள் கொண்ட கண்காட்சி பள்ளிக்கூடம்– கல்லூரி மாணவர்கள் பயன் பெறும் வகையில் நடத்தப்பட்டது.
இந்த கண்காட்சியில் அணுஉலையின் செயல்பாடு, பயன்பாடு, தொழில்நுட்ப சக்தி, அணு உலையின் தேவைக்கான மாதிரிகளையும், வரைபடங்கள், புகைப்படங்களையும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி, கல்லூரி மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளை சார்ந்த 500–க்கும் மேற்பட்ட மாணவ– மாணவிகள் பார்வையிட்டனர்.
மாணவர்கள் ஆர்வம்தொடர்ந்து வினாடி– வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த மாணவர்களும், பள்ளிக்கூட மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் சிவதாஸ், தேவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் கல்லூரி பேராசிரியர் ஹெலன் புளோரா ஒருங்கிணைப்பில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் செய்யப்பட்டு இருந்தது.