எடியூரப்பாவும், நானும் கலந்துகொள்வோம் கர்நாடகம் முழுவதும் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் மாநாடு நடக்கும் ஈசுவரப்பா பேட்டி
கர்நாடகம் முழுவதும் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் மாநாடு நடக்கும் என்றும், அந்த மாநாட்டில் நானும், எடியூரப்பாவும் கலந்துகொள்வோம் என்றும் மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.
சிவமொக்கா,
கர்நாடகம் முழுவதும் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் மாநாடு நடக்கும் என்றும், அந்த மாநாட்டில் நானும், எடியூரப்பாவும் கலந்துகொள்வோம் என்றும் மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா நேற்று முன்தினம் சிவமொக்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மாநிலம் முழுவதும் மாநாடுபா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும், மூத்த தலைவர்களும் நான் தொடங்கி உள்ள சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பை கலைக்க வேண்டாம் என்றும், அதன் பெயரிலேயே பிற்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடும்படி உத்தரவிட்டுள்ளனர். பா.ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு இந்த அமைப்பு உதவியாக இருக்கும் என்று டெல்லியில் வைத்து எனக்கும், எடியூரப்பாவுக்கும் கட்சியின் மேலிடம் கூறியது.
இதனால் திட்டமிட்டபடியே கர்நாடகம் முழுவதும் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பின் மாநாடு நடக்கும். இதில் நானும், எடியூரப்பாவும் கலந்துகொள்வோம். இந்த சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பு, அரசியல் அமைப்பு கிடையாது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பு ஆகும்.
குற்றச்சாட்டை மறைப்பதற்காக....முதல்–மந்திரி சித்தராமையா தனது பதவியை காப்பாற்றுவதற்காக கட்சியின் மேலிடத்திற்கு கோவிந்த ராஜ் எனபவர் மூலம் ரூ.1,000 கோடி கொடுத்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி மேலிடம் மற்றும் சித்தராமையாவின் வேஷம் கலையப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு வெளியானதும், அதனை மறைப்பதற்காக எடியூரப்பாவும், அனந்தகுமாரும் பா.ஜனதா கட்சியின் மேலிடத்திற்கு பணம் கொடுத்தது பற்றி பேசுவது போன்ற போலியான சி.டி.யை தயாரித்து காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்ட சி.டி. போலியானது. அதில் உண்மை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.