காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் பகுதிகளை சீரமைக்கும் பணி


காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் பகுதிகளை சீரமைக்கும் பணி
x
தினத்தந்தி 18 Feb 2017 3:30 AM IST (Updated: 18 Feb 2017 1:17 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் ரூ.1,939 கோடியில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் பகுதிகளை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 85 ஏக்கரில் அறுவடை பணி முடிந்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று 170 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 20 ஆயிரத்து 593 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. விற்பனை செய்யப்படும் நெல்லிற்கு உண்டான தொகையை மின்னணு வங்கி பண பரிவர்த்தனை மூலமாக விவசாயிகள் பெற்று கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தின் உரத்தேவைக்காக 11 ஆயிரத்து 289 டன் யூரியாவும், 6 ஆயிரத்து 612 டன் டி.ஏ.பி.யும், 3 ஆயிரத்து 339 டன் பொட்டாஷ் உரமும், 4 ஆயிரத்து 864 டன் காம்ப்ளக்ஸ் உரமும் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் அவர்கள் பார்வையிட்டபோது விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து விரிவாக எடுத்து கூறினார்கள். கிராம நிர்வாக அலுவலர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் வறட்சி குறித்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். நமது மாவட்டத்தில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ரூ.1,939 கோடியில் பணி

விவசாயிகளின் வங்கி கணக்கு பெறும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. விவசாயிகள் தங்கள் வயலுக்கு அருகில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் மற்றும் சவுடு மண் எடுத்து தங்கள் வயலில் போட்டு மண் வளத்தை கூட்டிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியை மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் அனைத்து நீதிபதிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

கல்லணைக் கால்வாய் உபவடிநிலத்தின் மேம்பாட்டு திட்ட அறிக்கைக்கு ரூ.2 ஆயிரத்து 298 கோடியே 75 லட்சத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காவிரி மற்றும் வெண்ணாறு வடிநில பகுதிகளை உள்ளடக்கிய பணிகளுக்கு ரூ.8 ஆயிரத்து 970 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் தஞ்சை மாவட்டத்தில் 1,939 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலை அமைப்புகளை விவசாயிகளின் பங்கேற்பு மூலம் சீரமைக்கும் பணிகளுக்கு தமிழகஅரசு ரூ.100 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தை செயல் படுத்த திட்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

2016-17-ம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் 54 கரையை பலப்படுத்துதல் பணி மற்றும் 224.86 கிலோமீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணி ரூ.3 கோடியே 10 லட்சத்து 13 ஆயிரத்திலும், 57 கட்டுமான பணி ரூ.4 கோடியே 55 லட்சத்து 25 ஆயிரத்திலும், 8 அடைப்பு பலகைகள் பணி ரூ.60 லட்சத்து 50 ஆயிரத்திலும் என மொத்தம் 119 பணிகள் ரூ.8 கோடியே 25 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story