இதயநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களின் விலை கணிசமாக குறைப்பு மத்திய மந்திரி அனந்தகுமார் தகவல்


இதயநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களின் விலை கணிசமாக குறைப்பு மத்திய மந்திரி அனந்தகுமார் தகவல்
x
தினத்தந்தி 18 Feb 2017 1:24 AM IST (Updated: 18 Feb 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

இதயநோய் சிகிச்சை பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களின் விலை கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளதாக மத்திய மந்திரி அனந்தகுமார் தெரிவித்தார்.

பெங்களூரு,

இதயநோய் சிகிச்சை பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களின் விலை கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளதாக மத்திய மந்திரி அனந்தகுமார் தெரிவித்தார்.

விலை குறைப்பு

இதயநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘ஸ்டென்ட்‘ மருத்துவ உபகரணத்தின் விலை குறைப்பு ஒரு கண்ணோட்டம் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி பெங்களூரு பசவனகுடியில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உரம், ரசாயனம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார் கலந்துகொண்டு பேசியதாவது:–

இதயநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘ஸ்டென்ட்‘ மருத்துவ உபகரணம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனையாகி வந்தது. இந்த விலை தற்போது ரூ.7,260 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு கடந்த 13–ந் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதை விட கூடுதல் விலைக்கு விற்கும் மருந்து கடைகள் மற்றும் உற்பத்தியாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும்.

4 லட்சம் இதயநோயாளிகள்

அதே போல் ‘சிறப்பு ஸ்டென்ட்‘ உபகரணம் சந்தையில் ரூ.1.70 லட்சத்திற்கு விற்கப்பட்டது. இதன் விலை தற்போது ரூ.29 ஆயிரத்து 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள். 2015–ம் ஆண்டு சுகாதாரத்துறை அறிக்கையின்படி நாட்டில் ரூ.6.19 கோடி பேர் இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு 4 லட்சம் இதயநோயாளிகளுக்கு இந்த ‘ஸ்டென்ட்‘ உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 5 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உபகரணத்தின் தயாரிப்பு செலவு குறைவு தான். ஆயினும் அது அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தது. இதை அறிந்து, மத்திய அரசு அவற்றின் விலையை குறைத்துள்ளது.

ரூ.5,000 கோடி மிச்சம்

தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இந்த உபகரணம் சேர்க்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தையில் அதன் விலையை அதிகமாக வைத்து விற்றனர். மத்திய அரசு இந்த உபகரணத்தை பட்டியலில் சேர்த்து, அதன் விலையை 5 மடங்கு வரை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பால் இந்திய அளவில் நோயாளிகளுக்கான செலவு ஆண்டுக்கு ரூ.5,000 கோடி மிச்சமாகும்.

இந்த விலை குறைப்பை காரணமாக வைத்து இந்த உபகரணத்தை தயாரிக்கும் அளவை உற்பத்தியாளர்கள் குறைக்கக்கூடாது. முன்பு சந்தையில் எப்படி தாராளமாக கிடைத்ததோ அதே போல் எப்போதும் கிடைக்க வேண்டும். ஒருவேளை விதிமுறைகளை மீறினால் அந்த உபகரணம் தயாரிக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யும். இது தொடர்பாக அனைத்து மாநிலங்களின் சுகாதாரத்துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அனந்தகுமார் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story