சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் பேச்சு


சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் பேச்சு
x
தினத்தந்தி 18 Feb 2017 3:30 AM IST (Updated: 18 Feb 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.

கோலார் தங்கவயல்,

கர்நாடகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.

காங்கிரஸ் மாநாடு

கோலார் தங்கவயலை அடுத்துள்ள கேசம்பள்ளா கிராமத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் மற்றும் கோலார் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கே.எச்.முனியப்பா ஆகியோர் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தனர்.

இந்த மாநாட்டில் மந்திரிகள் ரமேஷ் குமார், ராமலிங்கரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், தேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹரிபிரசாத், முன்னாள் எம்.எல்.சி. சுதர்சன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரா ரெட்டி, தங்கவயல் நகரசபை தலைவர் ரமேஷ் குமார் ஜெயின், மாநில காங்கிரஸ் துணைத்தலைவி ரூபா சசீதர், தங்கவயல் நகர அபிவிருத்தி குழும தலைவர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் பாடம் புகட்டுவார்கள்

பின்னர் மாநாட்டில் தினேஷ் குண்டுராவ் பேசும்போது கூறியதாவது:–

காங்கிரஸ் அரசு மக்களுக்கு கொடுத்த நிறைய வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. மீதமுள்ள தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் ஓராண்டுக்குள் நிறைவேற்றி விடும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி வார்த்தைகளால் மட்டும் நிறைய வாக்குறுதிகளை கூறுகிறார். ஆனால் அவர் இதுவரை எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

500, 1,000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பா.ஜனதாவுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூருவில் சேரும் குப்பைகள்...

மாநாட்டில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேசும்போது, ‘‘கோலார் தங்கவயலில், பெங்களூருவில் சேரும் குப்பைகளை கொட்ட முடிவு செய்யப்பட்டது உண்மைதான். ஆனால் அந்த திட்டம் வாபஸ் பெறப்பட்டது. மக்களுக்கு விரோதமாக காங்கிரஸ் அரசு செயல்படாது’’ என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து மந்திரி ரமேஷ் குமார் பேசும்போது, ‘‘சுரங்க காலனி பகுதியில் உள்ள வீடுகளில் வசித்து வரும் மக்களுக்கு, அவர்கள் வசித்து வரும் வீடுகளை அவர்களுக்கே சொந்தமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் நகரசபையில் உள்ளன. அதனை பயனாளிகள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

மாநாட்டில் மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story