ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், முதல் கட்டமாக குளங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், முதல் கட்டமாக குளங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
x
தினத்தந்தி 18 Feb 2017 3:00 AM IST (Updated: 18 Feb 2017 2:04 AM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், முதல் கட்டமாக 8 குளங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் மாநகராட்சி தனி அதிகாரி தகவல்

கோவை

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதல் கட்டமாக 8 குளங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி தனி அதிகாரி கூறினார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

இந்தியா முழுவதும் முதல் கட்டமாக 20 நகரங்களை “ஸ்மார்ட்” சிட்டியாக மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் கோவை நகரமும் அடங்கும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கி உள்ளன. இதில் மத்திய அரசு வழங்கிய நிதி மூலம் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதல்கட்டமாக கோவை மாநகரத்தில் உள்ள 8 குளக்கரைகளையொட்டி உள்ள 14 வார்டுகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளனர். அந்த வார்டுகளில் சாலையோர இருக்கைகள் அமைக்கும் திட்டம், பள்ளிகளை நவீனமயமாக்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.

பணிகள்

ஸ்மார்ட் சிட்டி (சீர்மிகுநகர்) திட்டத்தின் கீழ் கோவையில் முதல் கட்டமாக ரூ.189 கோடி செலவில் குளங்களை சீரமைத்தல், தூர்வாருதல், ஆகாயத்தாமரைகள் அகற்றுதல், கரைகளை பலப்படுத் துதல், மழைநீர் வடிகால் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெறும். ரூ.66 கோடி செலவில் குளக்கரை சாலைகளை அழகுபடுத்துதல், சைக்கிள் நடைபாதை, நடைபயிற்சி சாலை, சோலார், எல்.இ.டி. விளக்குகள், தண்ணீர் விளையாட்டுகள், படகு இல்லம், மூலிகை பூங்கா அமைக்கப்படுகிறது. இது தவிர நடைபாதைகள் மற்றும் சாலைகள், சைக்கிள் பாதை, மோட்டார் சைக்கிள் பாதை, வாகன நிறுத்துமிடம், சாலை செப்பனிடுதல் போன்ற பணி நடைபெறுகிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

சுத்திகரிப்பு நிலையங்கள்

இதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக சிங்காநல்லூர் குளத்தை தூர்வாரும் பணி நடைபெறுகிறது. அதில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு, படகு துறை அமைத்தல், 80 அடி அணுகுசாலை அமைத்தல், நடைபாதை வடிவமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இது தவிர ரூ.11 கோடி செலவில் மழைநீர் சேமிப்பு, ரூ.15 கோடி செலவில் கழிவு மேலாண்மை, ரூ.23 கோடி செலவில் திடக்கழிவு மேலாண்மை, ரூ.4 கோடி செலவில் கழிவறைகள், ரூ.233 கோடி செலவில் அனைவருக்கும் வீட்டு வசதி மற்றும் சமூக மேம்பாட்டு வசதி, ரூ.78 கோடி செலவில் எரிசக்தி வசதி, ரூ.62 கோடி மதிப்பில் திட்டம் மேம்படுத்துதல், ரூ.125 கோடி மதிப்பில் சில்லறை செலவினங்கள், ரூ.84 கோடி செலவில் சி.சி.டி.வி. கேமரா அமைத்து கண்காணித்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து கோவை மாநகராட்சி கமிஷனரும், தனி அதிகாரியுமான விஜயகார்த்திகேயனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடப்பாண்டில் 8 திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் சில மாதங்களில் தொடங்கும். இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 8 குளங்களை சீரமைக்கும் போது ஒவ்வொரு குளங்களிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story