சங்குத்துறை கடற்கரையில் மரக்கன்றுகள் நாசம்- கடைகள் சூறை போதை கும்பல் அட்டகாசம்


சங்குத்துறை கடற்கரையில் மரக்கன்றுகள் நாசம்- கடைகள் சூறை போதை கும்பல் அட்டகாசம்
x
தினத்தந்தி 18 Feb 2017 3:30 AM IST (Updated: 18 Feb 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

சங்குத்துறை கடற்கரையில் மரக்கன்றுகளை நாசம் செய்து கடைகளை சூறையாடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

கடற்கரை

நாகர்கோவில் அருகே சங்குத்துறை கடற்கரைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பள்ளம் ஊராட்சி சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் கடற்கரையின் அழகை கூட்டும் வகையில் அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. இந்த மரக்கன்றுகளை 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் பராமரித்து வருகிறார்கள்.

சங்குத்துறை கடற்கரையில் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இருக்காது. இதை பயன்படுத்தி போதை கும்பல் கடற்கரையில் அமர்ந்து மது குடிப்பதும், பின்னர் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்துவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

மரக்கன்றுகள் சேதம்

இதேபோல் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் சிலர் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் மது குடித்துவிட்டு அந்த பகுதியில் நடப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பிடுங்கி எறிந்து சேதப்படுத்தி உள்ளனர். அந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்த வாளி, குடங்களை அடித்து உடைத்து கடலில் வீசி உள்ளனர்.

மேலும், அருகில் இருந்த இரண்டு பெட்டிக்கடைகளை அடித்து உடைத்து சூறையாடினர். அத்துடன், சுற்றுலா பயணிகள் அமருவதற்காக போடப்பட்டிருந்த இருக்கைகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். மின்கம்பத்தில் இருந்த மீட்டர் பெட்டியையும் உடைத்து நாசமாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

போலீசில் புகார்

நேற்று காலை அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் கடற்கரை சேதப்படுத்தப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நூறுநாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர் பொறுப்பாளர் மைக்கேல் நாயகி சுசீந்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் மற்றும் போலீசார் கடற்கரைக்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து, இரவில் கடற்கரையில் மது குடித்த மர்ம நபர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபோன்று சமூக விரோதிகள் அத்துமீறுவதை தடுக்க இரவு நேரங்களில் கடற்கரையில் போலீசார் ரோந்து வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story