சின்னமனூர் அருகே ஜல்லிக்கட்டு: களத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்; அடக்க முயன்ற 51 பேர் காயம்


சின்னமனூர் அருகே ஜல்லிக்கட்டு: களத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்; அடக்க முயன்ற 51 பேர் காயம்
x
தினத்தந்தி 20 Feb 2017 3:45 AM IST (Updated: 20 Feb 2017 12:43 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 51 பேர் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையால் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்தநிலையில் தடை நீக்கப்பட்டதை அடுத்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர்.

இதற்காக வாடிவாசல் அமைக்கும் பணி, பார்வையாளர் ‘கேலரி’ அமைக்கும் பணி நடந்து வந்தது. இவை அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பாக ஏழைகாத்தம்மன் வல்லடிகாரசாமி கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன.

மருத்துவ பரிசோதனை

அதன்பின்னர் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டில் திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து 430 மாடுகள் கலந்து கொண்டன.

முன்னதாக காளைகளுக்கு தேனி மண்டல இணை இயக்குனர் வரதராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். ஜல்லிக்கட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து 404 பிடிவீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதுன. மேலும் அவர்களுக்கு மஞ்சள் நிறத்தில் சீருடையும் வழங்கப்பட்டது.

ஆரவாரம்

பின்னர் அறிவிப்பாளர் ஒலி பெருக்கியில் வாசிக்க காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே அவிழ்த்து விடப்பட்டன. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடந்ததால், அதனை காண ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் கரகோஷம் எழுப்பி, விசில் அடித்து வீரர்களை ஆரவாரம் செய்தனர்.

இதையடுத்து களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வந்த வேகத்தில் வெளியே ஓடின. சில காளைகள் வீரர்களை பந்தாடின. இருந்தபோதிலும் வீரர்கள் சளைக்காமல் காளையுடன் மல்லுக்கட்டினர். அவ்வப்போது அறிவிப்பாளர் பரிசுகளையும் அறிவிப்பு செய்து வீரர்களை குஷி படுத்தினார்.

51 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்ககாசு, சைக்கிள், பித்தளை பாத்திரங்கள், பீரோ, பட்டு புடவைகள் பரிசாக வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காளைகளிடம் சிக்கி 51 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதில், 6 பேரை மேல் சிகிச்சைக்காக தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வண்ணம் தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story