கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கிருஷ்ணகிரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கிருஷ்ணகிரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 27 Feb 2017 11:00 PM GMT (Updated: 2017-02-27T19:02:20+05:30)

கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி,

பசுமை வீடு

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள், உதவித்தொகை, பட்டா, வீட்டுமனை, மின்இணைப்பு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

சந்தூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 20–க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

காட்டாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சந்தூர் கிராமத்தில் 20–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஏழ்மையான நிலையில் வீடு இல்லாமல் குடிசை அமைத்து 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். தற்போது காட்டகரம் ஊராட்சிக்கு தொகுப்பு வீடுகள் கட்டிட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வீடற்ற நிலையில், சந்தூர் ஏரிக்கு கீழ் பகுதிகளில் வசிக்கும் எங்களுக்கு பசுமைவீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினை

இதே போல், பர்கூர் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் பாலமுருகன் தலைமையில் வந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:– பர்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 1–வது வார்டு, சூப்பிரண்டு கிருஷ்ணசாமி நாயுடு தெரு, சாந்தி காளியம்மன் கோவில் முதல் பர்கூர் ஆறு வரை உள்ள குடியிருப்புகளில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறையும் இருப்பதால் வறட்சி நிவாரண திட்டத்தில் இருந்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும். இதே போல், பர்கூர் ஊராட்சி ஒன்றியம் மல்லப்பாடி ஊராட்சி, வாணியம்பட்டி சாலையில் உள்ள பாரதிநகர், ரங்கப்பன் நகர், இஸ்லாம் நகர், வாணியம்பாடி ரோடு பகுதிகளிலும் குடிநீர் இன்றி மக்கள் தவித்து வருகிறார்கள்.

கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் கதிரவன் சம்பந்தபட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


Next Story