ஓமலூர் அருகே 2 பெண்டாட்டிக்காரர் அடித்துக்கொலை உறவினர்கள் 2 பேர் கைது


ஓமலூர் அருகே 2 பெண்டாட்டிக்காரர் அடித்துக்கொலை உறவினர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2017 10:45 PM GMT (Updated: 2017-02-27T21:00:30+05:30)

ஓமலூர் அருகே 2 பெண்டாட்டிக்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

ஓமலூர்,

தகராறு

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கணவாய்புதூர் ஊராட்சி கே.மோரூர் சின்னாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சித்தன் என்ற காரிக்குட்டி (வயது 75), விவசாயி. இவருக்கு கண்ணம்மாள், காவேரி என 2 மனைவிகள் உள்ளனர்.

காரிக்குட்டியின் தோட்டத்தில் அவரும், அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான வேலு (40), பூஞ்சோலை (68) ஆகியோரும் நேற்று முன்தினம் இரவு மது அருந்தினர். அப்போது காரிக்குட்டி போதை ஏறவில்லை என வேலு, பூஞ்சோலையிடம் தகராறு செய்தார். மேலும் தகாத வார்த்தையால் திட்டினார். அப்போது வேலு, மது வாங்கி வந்து கொடுத்த எங்களையே திட்டுகிறாயா? என காரிக்குட்டியின் கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது.

சாவு

இதில் காரிக்குட்டி மயங்கி விழுந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் வேலுவும், பூஞ்சோலையும் அங்கிருந்து சென்று விட்டனர். இந்தநிலையில் குடிபோதையில் காரிக்குட்டி இறந்து கிடப்பதாக கருதி அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து வந்தனர். அப்போது காரிக்குட்டியின் கன்னத்தில் கையால் அடித்ததற்கான அடையாளம் இருந்தது.

எனவே, காரிக்குட்டி அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தீவட்டிப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து காரிக்குட்டியின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உறவினர்களான வேலு, பூஞ்சோலை ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இவர்கள் உறவினர்கள் என்பதால் குடும்ப பிரச்சினை காரணமாக காரிக்குட்டியை திட்டமிட்டு அழைத்து வந்து மது குடிக்க வைத்து கொலை செய்தனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.


Next Story