ஸ்ரீகாளஹஸ்தியில் 4 பெண்களின் இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தம் குழந்தைகள் நலத்திட்ட அதிகாரிகள் நடவடிக்கை


ஸ்ரீகாளஹஸ்தியில் 4 பெண்களின் இளம்வயது திருமணம் தடுத்து நிறுத்தம் குழந்தைகள் நலத்திட்ட அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 27 Feb 2017 10:45 PM GMT (Updated: 27 Feb 2017 4:36 PM GMT)

ஸ்ரீகாளஹஸ்தியில் 4 பெண்களின் இளம்வயது திருமணத்தை குழந்தைகள் நலத்திட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

ஸ்ரீகாளஹஸ்தி,

இளம்வயது திருமணம்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 9–வது நாளான நேற்று அதிகாலை 3 மணியளவில், சிவன் கோவில் வெளியே உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானபிரசுனாம்பிகை தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அந்த நேரத்தில் கல்யாணம் ஆகாத இளைஞர்கள், இளம்வயது பெண்கள் திருமணம் செய்து கொண்டால், அவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

எனவே அந்த நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தி மற்றும் பல்வேறு கிராமங்களில் உள்ள படிப்பறிவில்லா இளம்வயது பெண்கள் திருமணம் செய்து கொள்வார்கள். இந்த இளம்வயது திருமணத்தை தடுத்து நிறுத்த குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி விந்தியா தலைமையில் அதிகாரிகள் கோவிலின் நான்கு மாட வீதிகளில் தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டனர்.

பிடிபட்டனர்

அப்போது ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த ஏர்ப்பேடு மண்டலம் குண்டலகண்டிகையைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க பெண், தொட்டம்பேடு மண்டலம் பூடி கிராமத்தைச் சேர்ந்த 14 மற்றும் 13 வயது மதிக்கத்தக்க இரு பெண்கள், தொட்டம்பேடு பகுதியைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க பெண் என மொத்தம் 4 பேரும் திருமணம் செய்து கொள்ள மஞ்சள், மாங்கல்ய கயிறு சகிதமாக பெற்றோர், உறவினர்களுடன் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு வந்தனர்.

அங்கு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த குழந்தைகள் நலத்திட்ட அதிகாரிகள் மேற்கண்ட இளம்வயது பெண்கள் 4 பேரை கையும் களவுமாக பிடித்தனர். பிடிபட்ட இளம்வயது பெண்கள் 4 பேரும் மருத்துவ மற்றும் வயது பரிசோதனைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் 4 பெண்களுக்கும் திருமணத்துக்கான 18 வயது பூர்த்தி ஆகாதது தெரிய வந்தது. 4 பேரும் இளம் வயதில் திருமணம் செய்து கொள்ள வந்ததாக கூறினர்.

தடுத்து நிறுத்தம்

இதையடுத்து 4 பேருக்கு நடக்க இருந்த இளம்வயது திருமணத்தை குழந்தைகள் நலத்திட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவர்களுடன் வந்த பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியோரை வரவழைத்து அதிகாரிகள் கவுன்சிலிங் கொடுத்தும், எச்சரித்தும் அனுப்பி வைத்தனர்.


Next Story