அரூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்


அரூர் அருகே  குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 Feb 2017 11:00 PM GMT (Updated: 2017-02-27T22:38:44+05:30)

அரூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரூர்,

குடிநீர் தட்டுப்பாடு

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது குமாரம்பட்டி கிராமம். இங்கு 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யாததால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆத்திரமடைந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் அரூர்– ஊத்தங்கரை சாலையில் குமாரம்பட்டியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்கள் கிராமத்திற்கு ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிப்பதற்கும், வீட்டு உபயோகத்திற்கும் அருகில் உள்ள விவசாய தோட்டத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த கிராமத்திற்கு சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் உறுதியளித்தனர். இத்தொடர்ந்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story