மணப்பாடு கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு


மணப்பாடு கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
x
தினத்தந்தி 27 Feb 2017 11:30 PM GMT (Updated: 2017-02-28T00:25:08+05:30)

மணப்பாட்டில் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தில் தாய், மகன், மகள் என 3 பேர் பலியான பரிதாப சம்பவம் நடந்துள்ளது. விபத்து தொடர்பாக படகு உரிமையாளரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூர்,

சுற்றுலா சென்றனர்

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள படுக்கப்பத்து அழகம்மன்புரத்தில் கோவில் கொடை விழா கடந்த 3 நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் விழா முடிந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஒரு வேனில் மணப்பாட்டுக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள், படகில் ஏறி கடலில் சவாரி செல்ல விரும்பினர்.

மணப்பாடு கடற்கரையின் தென்பக்கத்தில் இயற்கையாக அமைந்த மணல் குன்று உள்ளது. வடபக்கத்தில் கருமேனி ஆறு சங்கமிக்கிறது. இதன் காரணமாக கடற்கரையில் ஆழம் குறைவாகவும், ஆங்காங்கே மணல் திட்டுகளாகவும் உள்ளது. இதனால் மீனவர்கள் படகில் மணல் திட்டுகளை சுற்றி கடற்கரைக்கு வருவார்கள். அதேபோன்று சுற்றுலா பயணிகளும் மணல் திட்டுகள் வரையிலும் நடந்து செல்வார்கள்.

படகு கவிழ்ந்தது

அழகம்மன்புரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள், கெவின் என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் ஏறி கடலுக்குள் சவாரி சென்றனர். அந்த படகில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் 19 பேரும், பெரியவர்கள் 23 பேரும் என 42 பேர் பயணம் செய்தனர். மணல் திட்டில் இருந்து சில அடி தொலைவில் சென்றபோது படகு நிலைதடுமாறி கடலுக்குள் கவிழ்ந்தது.

அப்போது படகில் மிதவைகளுடன் இருந்த மீன்பிடி வலைகளும் தண்ணீரில் விழுந்து மிதந்தது. இதனால் தண்ணீரில் தத்தளித்தவர்களை மீன்பிடி வலைகளும் சூழ்ந்ததால் அவர்கள் மூச்சு திணறினர்.

மூச்சுத்திணறி பலி

இதனைப் பார்த்த மற்ற சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனர். உடனே கடற்கரையில் இருந்த மீனவர்கள், படகுகளில் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் மூழ்கி மூச்சு திணறியவர்களை மீட்டு குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கும், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மணல் திட்டு அருகில் படகு மூழ்கியதால் மீனவர்கள் விரைந்து சென்று கடலில் தத்தளித்தவர்களை மீட்க முடிந்தது. கடலில் தத்தளித்த சிலர் நீச்சல் அடித்தும் மணல் திட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

இந்த விபத்தில் படுக்கப்பத்து அழகம்மன்புரத்தை சேர்ந்த ஆறுமுககொடி மனைவி உஷா(வயது 45), மகன் சுந்தரேஷ்(9), சுந்தரராஜ் மனைவி முருகேசுவரி(40), மகன் அருண்குமார்(9), ஜெயராமன்(43), இவருடைய மனைவி முத்துசெல்வி(37), வரதராஜன் மகன் சுரேந்திரன் (10), கணேசன் மகள் முத்துலட்சுமி(20), திருச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் மனைவி சுகன்யா(26) ஆகிய 9 பேர் சம்பவ இடத்திலும், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

இதற்கிடையே ஆறுமுககொடியின் மகள் அபி(12) கடலில் மூழ்கியதில் மாயமானார். அவரை தேடும் பணி நள்ளிரவு வரையிலும் நீடித்தது. அதன்பிறகு தேடும் பணி நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து 2-வது நாளாக நேற்று காலையிலும் தேடும் பணி நடந்தது. கடலோர காவல்படைக்கு சொந்தமான டார்னியர் ரக விமானம் கடலில் தாழ்வாக பறந்து தேடும் பணியில் ஈடுபட்டது. காலை 9 மணி அளவில் மாயமான அபியின் உடல் கடலில் பிணமாக மிதந்தது.

உடனே மீனவர்கள் மற்றும் போலீசார் இறந்த அபியின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

11 பேர் காயம்

கடலில் படகு மூழ்கிய விபத்தில் திருச்சியை சேர்ந்த அந்தோணி ஆல்பின் மனைவி சோபியா(28), வெங்கடாசலம் மனைவி சரோஜா(49), படுக்கப்பத்து அழகம்மன்புரத்தை சேர்ந்த வரதராஜன் மனைவி கவிதா(27), கணேசன் மகள் மீனாட்சி சுந்தரி(25), தினேஷ் மனைவி கவிதா(22), ஜெயராம் மகன் சந்தோஷ்(10),

ராஜாராம் மகள் பிரியதர்ஷினி(11), வரதராஜன் மகன் திலீபன்(9), சந்திரசேகர் மகள் சிவகார்த்திகா(17), சந்திரசேகர் மகள் சிவரஞ்சனி(18), ராம் தினேஷ் மகன் பிரணவ்(10 மாத கைக்குழந்தை) ஆகிய 11 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் திருச்செந்தூர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படகு கவிழ்ந்த விபத்தில் பலியான 10 பேரின் உடல்களும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பலியான 10 பேரில் 9 பேரின் உடல்கள் படுக்கப்பத்து அழகம்மன்புரத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நேற்று மாலை அங்கு அடக்கம் செய்யப்பட்டது. சுகன்யாவின் உடல் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

படகு உரிமையாளர் கைது

இந்த விபத்து குறித்து கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து படகு உரிமையாளர் கெவின்(40) என்பவரை தூத்துக்குடியில் வைத்து பிடித்து கைது செய்தனர். கைதான கெவினிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போது அவர் கூறியதாவது:-

மணப்பாட்டுக்கு சுற்றுலா வந்தவர்கள் கடலில் சிறிது தூரம் சவாரி அழைத்து செல்லுமாறு என்னிடம் கேட்டனர். இதனால் அவர்களை நான் சிறிது தூரம் கடலுக்குள் அழைத்து சென்றேன். இதற்காக நான் அவர்களிடம் இருந்து பணம் எதுவும் பெறவில்லை. படகு சிறிது தூரம் சென்றபோது படகில் இட நெருக்கடியாக இருந்ததால் படகுக்கு வெளிப்பகுதியில் பொருத்தக்கூடிய என்ஜினை சிறிது நகர்த்தி சரி செய்தேன். அப்போது அலையின் வேகத்தில் படகு கடலுக்குள் கவிழ்ந்து விட்டது. அங்கு இருந்தால் பொதுமக்கள் என்னை தாக்ககூடும் என்ற பயத்தில் நான் தூத்துக்குடி வந்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 

Next Story