ஆரல்வாய்மொழியில் கார்-லாரி மோதல்: தந்தை-மகள் உள்பட 3 பேர் பலி தாய்-மகன் படுகாயம்


ஆரல்வாய்மொழியில் கார்-லாரி மோதல்: தந்தை-மகள் உள்பட 3 பேர் பலி தாய்-மகன் படுகாயம்
x
தினத்தந்தி 27 Feb 2017 11:30 PM GMT (Updated: 2017-02-28T00:25:10+05:30)

ஆரல்வாய்மொழியில் கார்-லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் தந்தை-மகள் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். தாய்-மகன் படுகாயம் அடைந்தனர்.

ஆரல்வாய்மொழி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கார்- லாரி மோதல்

கேரள மாநிலம் வட்டியூர் காவு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவரது மனைவி முத்துமாரி(40). இவர்களது மகன் கார்த்திகேயன்(19), மகள் கார்த்திகா(16). இவர்கள் 4 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை எட்டயபுரம் அருகே ஈரால் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட காரில் சென்றனர். காரை அதேபகுதியை சேர்ந்த ஆசிக்(28) என்பவர் ஓட்டி சென்றார். அனைவரும் ஈராலில் தங்கி இருந்து சாமி கும்பிட்டனர். நேற்று காரில் அனைவரும் ஊருக்கு புறப்பட்டனர்.

நேற்று மாலை 3 மணி அளவில் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி நூற்பாலை பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு டிப்பர் லாரி வந்தது. திடீர் என்று காரும், லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் காரின் முன் பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

3 பேர் பலி

இந்த விபத்தில் காரில் இருந்த கணேசன், இவரது மகள் கார்த்திகா, டிரைவர் ஆசிக் ஆகிய 3 பேரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். முத்துமாரி, கார்த்திகேயன் ஆகிய 2 பேரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பலியான 3 பேரின் உடலை பொதுமக்கள் மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. உடனே இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கும், நாகர்கோவிலில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். நிலைய தீயணைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதேபோல் போலீசாரும் விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் வைத்திருந்த ‘கட்டிங்‘ எந்திரம் மூலம் காரின் முன் பகுதி வெட்டி எடுக்கப்பட்டு பிணமான 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. பிறகு 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் நேரில் வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். ஆரல்வாய்மொழி (பொறுப்பு) போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விபத்தால் நாகர்கோவில்- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story