மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 300 பெண்கள் உள்பட 500 பேர் கைது


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 300 பெண்கள் உள்பட 500 பேர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2017 10:45 PM GMT (Updated: 2017-02-28T01:10:29+05:30)

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க வலியுறுத்தி கீழையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 300 பெண்கள் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேளாங்கண்ணி,

சாலை மறியல்

நாகை மாவட்டம் கீழையூர் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

கடன் தள்ளுபடி

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 3 மாத சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும்.

2015-16-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சியால் பாதித்த விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கி உள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

திருப்பூண்டி

அதேபோல மேலப்பிடாகை கடைத்தெருவில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பால்சாமி தலைமை தாங்கினார். திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் தலைமையிலும், நீடூர் பாலத்தில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம் தலைமையிலும், பாலக்குறிச்சி பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமையிலும், பெரியத்தும்பூரில் ஒன்றியக்குழு உறுப்பினர் உத்திராபதி தலைமையிலும், சோழவித்யாபுரத்தில் கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலும், மீனம்பநல்லூர் பாலத்தில் கிளை செயலாளர் ரவி தலைமையிலும், வாழக்கரையில் ஒன்றியக்குழு உறுப்பினர் முருகையன் தலைமையிலும், திருக்குவளையில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வைரன் தலைமையிலும், திருவாய்மூரில் கிளை செயலாளர் ஜோதிபாசு தலைமையிலும், சீராவட்டம் பாலத்தில் கிளை செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையிலும், காரப்பிடாகை கடைத்தெருவில் மாவட்டக்குழு உறுப்பினர் அப்துல்அஜீஸ் தலைமையிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 300 பெண்கள் உள்பட 500 பேரை கீழையூர் போலீசார் கைது செய்தனர். 

Next Story