ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2017 11:00 PM GMT (Updated: 2017-02-28T01:11:06+05:30)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி,

ஹைட்ரோ கார்பன்

தமிழகத்தில் விவசாயத்தை பாதிக்கும் வகையில் மீத்தேன் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்த திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், மக்களுக்கும் அதிக அளவு பாதிப்பு ஏற்படுவதால் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை மேற்கொண்டது. அதைதொடர்ந்து தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரமான விவசாயம் அழிந்துவிடும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், இந்த திட்டத்திற்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

போராட்டம்

இந்தநிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாணவர் பெருமன்றத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாலமுருகன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில் மாணவர் மன்ற நிர்வாகிகள் திரிசங்குராஜன், தினேஷ், காளிதாஸ் உள்பட திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர்

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கிளை தலைவர் குமார் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட தலைவர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஒன்றிய செயலாளர் தினேஷ், மாவட்ட துணை செயலாளர் தீபிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் யோகேஸ் வரன், மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். 

Next Story