தஞ்சை மாவட்டத்தில் 3¾ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி


தஞ்சை மாவட்டத்தில் 3¾ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
x
தினத்தந்தி 27 Feb 2017 10:15 PM GMT (Updated: 27 Feb 2017 7:41 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் 3¾ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது என்று கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.

தஞ்சாவூர்,

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் பங்களிப்புத்துறைகளின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் கோமாரி நோய் கட்டுப்பாட்டுத்திட்டத்தின் கீழ் 12-ம் சுற்று தடுப்பூசி பணி நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 21-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக 76 குழுக்கள் அமைக்கப்பட்டு 3 லட்சத்து 87 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது கால்நடைகளுக்கு தவறாது தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலமே கோமாரி நோயினை 100 சதவீதம் முற்றிலும் கட்டுப்படுத்த முடியும். எனவே பொதுமக்கள் அனைவரும் முழுஒத்துழைப்பு அளித்து திட்டம் முழுமையாக வெற்றியடைய உறுதுணையாக இருக்க வேண்டும்.

முழு ஒத்துழைப்பு

கிராம ஊராட்சிகளின் தனி அலுவலர்கள் அனைவரும் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் ஒலிப்பெருக்கி விளம்பரம் மற்றும் விளம்பர நோட்டீசு வாயிலாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கோமாரி நோயினைப் பற்றியும், தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கம் அளிக்க வேண்டும். கிராம ஊராட்சியின் பொறுப்பாளர்கள் தடுப்பூசி குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கிராமத்தில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி அளித்திட உதவி புரிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர்ராஜசேகரன், உதவி இயக்குனர்கள் டாக்டர் நெடுஞ்செழியன், டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Next Story