கோவை ரெயில் நிலையத்தில் புதருக்குள் புதைந்துபோன பயோ கழிவறை கருவிகள்


கோவை ரெயில் நிலையத்தில் புதருக்குள் புதைந்துபோன பயோ கழிவறை கருவிகள்
x
தினத்தந்தி 27 Feb 2017 10:15 PM GMT (Updated: 2017-02-28T01:26:08+05:30)

கோவை ரெயில் நிலையத்தில் பயோ கழிவறைக்கு பயன்படுத்தும் கருவிகள் புதருக்குள் புதைந்துபோய் வீணாக கிடக்கிறது.

பயோ கழிவறை கருவிகள்

நெடுந்தூர பயணத்துக்கு ரெயில் பயணம் மிகவும் சிறந்தது. இதனால் ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரெயிலில் கழிவறை வசதிகள் இருந்தாலும், அது முறையாக சுத்தம் செய்யப்படாததால், அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அதன் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும் பயணிகளின் நிலை பரிதாபமாக இருக்கிறது.

இந்த நிலையில், ரெயிலில் பயோ கழிவறை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த பயோ கருவிகள் ரெயிலில் உள்ள கழிவறையில் பொருத்தப்படுகிறது. பயோ கருவியில் கழிவுகள் விழுந்ததும் அதில் நிரப்பப்பட்டு இருக்கும் பாக்டீரியாக்கள் உடனடியாக கழிவுகளை மக்கச்செய்யும். அந்த கருவியில் தண்ணீர் மட்டும் தேங்கி நிற்கும். அதை ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்ததும் ஊழியர்கள் அகற்றுவார்கள்.

கோவையில் இருந்து செல்லும் ஒருசில ரெயிலில் பயோ கழிவறை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான கருவிகள் கோவை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த கருவிகள் அனைத்தும் ரெயில்களை சுத்தம் செய்யும் இடங்களில் வைக்கப்பட்டது. அதை பயன்படுத்த அதிகாரிகள் மறந்துவிட்டதால், தற்போது அந்த கருவிகள் அனைத்தும் வீணாக கிடக்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–

புதருக்குள் புதைந்துவிட்டது

கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களில் சோதனை அடிப்படையில் பயோ கழிவறை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் இருந்து அந்த கழிவறைக்கான, இரும்பினால் ஆன தொட்டிகள் உள்பட கருவிகள் கொண்டு வரப்பட்டு, ரெயில்களில் பொருத்தப்பட்டது. இந்த திட்டம் தோல்வியில் முடிந்ததால், மற்ற ரெயில்களில் அவற்றை பொருத்தாமல் அந்த கருவிகள் அனைத்தும் கோவை ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு பகுதியில் அப்படியே போடப்பட்டது.

நாளடைவில் அதிகாரிகள் அந்த கருவிகள் அங்கு இருப்பதையே மறந்துவிட்டனர். இதனால் அந்த கருவிகள் அனைத்தும் புதருக்குள் புதைந்து காணப்படுகிறது. தற்போது அனைத்து ரெயில்களிலும் பயோ கழிவறை அமைக்கப்படும் என்று ரெயில்வே துறை அமைத்துள்ளது. எனவே இந்த ரெயில் நிலையத்தில் வீணாக கிடக்கும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கருவிகளை உபயோகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story