குன்னூரில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி


குன்னூரில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 27 Feb 2017 10:45 PM GMT (Updated: 2017-02-28T01:27:28+05:30)

குன்னூரில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். எனவே சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பொய்த்து போன பருவமழை

நீலகிரி மாவட்டத்திற்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை மூலம் தண்ணீர் கிடைக்கிறது. இந்த மழைநீர் அணைகளில் தேக்கி வைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நீலகிரியில் மட்டும் சுமார் 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நீலகிரியில் கடந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான அணைகளில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது.

குன்னூர் நகராட்சியின் 30 வார்டுகளுக்கு பிரதான குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. இதுதவிர பந்துமி அணை, ஜிம்கானா நீர்தேக்கம், கரன்சி குடிநீர் திட்டம் ஆகியவை குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பருவமழை பொய்த்து போனதால் ரேலியா அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

குடிநீர் தட்டுப்பாடு

குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பெட்போர்டு, உழவர் சந்தை, ராஜாஜி நகர், ரெய்லி காம்பவுண்ட், பழைய ஆஸ்பத்திரி லைன் போன்ற குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. இந்த பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்து 29 நாட்களுக்கும் மேலாகி விட்டது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். குடிநீர் வினியோகம் சீராக இல்லாத காரணத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

மழை இல்லாத காரணத்தால் நீருற்றுகளிலும், கிணறுகளிலும் நீர்மட்டம் குறைவாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து ஒருவர் பின் ஒருவராக தண்ணீரை பிடித்து செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் குடியிருப்பு பகுதிகளுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story