மைல்கல் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளர்கள் பலி


மைல்கல் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 27 Feb 2017 10:00 PM GMT (Updated: 2017-02-28T01:28:38+05:30)

நிலக்கோட்டை அருகே மைல்கல் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 2 தொழிலாளர்கள் பலியாகினர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

தொழிலாளர்கள்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கவுண்டன்பட்டியை சேர்ந்த அமாவாசை மகன் சந்திரன் (வயது 34). பள்ளப்பட்டி வேலாயுதபுரத்தை சேர்ந்த சுப்புக்காளை மகன் செல்வம் (30). இவர்கள் இவரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் சொந்த வேலை காரணமாக இருவரும் நிலக்கோட்டை மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

பின்னர் பள்ளப்பட்டி நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை சந்திரன் ஓட்டினார். சிலுக்குவார்பட்டி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள மைல்கல் மீது பயங்கரமாக மோதியது.

2 பேர் பலி

இதில் தூக்கி வீசப்பட்டதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதற்கிடையே அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்புச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story