குடிநீர் கேட்டு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம்


குடிநீர் கேட்டு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2017 9:45 PM GMT (Updated: 2017-02-28T01:30:47+05:30)

திருப்பூர் மற்றும் அவினாசி பகுதியில் குடிநீர் கேட்டு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

முற்றுகை

திருப்பூர் மாநகராட்சி 1–வது வார்டு தண்ணீர்பந்தல் காலனி கிழக்கு பகுதியை சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மண்டல செயலாளர் செல்வராஜ் தலைமையில் மண்டல அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போர்வெல் பழுது நீக்கி முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும், உடனடியாக வடிகால் சுத்தம் செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பெருமாநல்லூர்

பெருமாநல்லூர் ஊராட்சி 6, 7–வார்டுக்கு உட்பட்ட சி.எஸ்.ஐ. காலனி, ஆதிதிராவிடர் காலனி, அறிவொளிநகர், பாரதி நகர், கொண்டத்துக்காளியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் குடும்பத்தினர் குடியிருந்து வருகிறார்கள். இப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீட்டு இணைப்பு குழாய், பொதுக்குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்னர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேற்று சென்றனர். பின்னர் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் விரைவில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தற்காலிகமாக இப்பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அவினாசி

அவினாசி பேரூராட்சி 12–வது வார்டில் உள்ள நேருவீதி, வ.உ.சி.காலனி பகுதிகளில் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிக்கு 10 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அவினாசி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட திரண்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் அவினாசி பேரூராட்சி அதிகாரி கருப்பசாமி மற்றும் அலுவலர்கள் விரைந்து சென்று அந்த பெண்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினார்கள். அப்போது 12–வது வார்டு பகுதிக்கு லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story