பவானி ஜம்பையில் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


பவானி ஜம்பையில் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 27 Feb 2017 11:00 PM GMT (Updated: 27 Feb 2017 8:02 PM GMT)

பவானி ஜம்பையில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வளர்ச்சி திட்ட இயக்குனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏராளமானோர் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

பவானி அருகே உள்ள ஜம்பை அம்மன்நகர் பகுதியை சேர்ந்த 25 பேர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மாவட்ட வளர்ச்சி திட்ட இயக்குனரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

எங்கள் கிராமத்தில் 50–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். தற்போது ஜம்பை மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் மதுக்கடையை எங்கள் பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வழியாக தான் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ –மாணவிகள் நடந்து செல்கிறார்கள். மதுக்கடை அமையும் பட்சத்தில் குடிகாரர்களால் மாணவ –மாணவிகளுக்கும் மற்றும் பெண்களுக்கும் தொந்தரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எங்கள் பகுதியில் மதுக்கடைகள் அமைக்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.

மயான ஆக்கிரமிப்பு

பெருந்துறை அருகே உள்ள தாளக்கரைப்புதூர் பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டார் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–

தாளக்கரைப்புதூர் பகுதியில் 160 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடந்த 100 ஆண்டுகளாக விவசாயம் மற்றும் சிறு தொழில் செய்து வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் உள்ள மயானத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் கம்பி வேலி அமைத்துள்ளார்.

நாங்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த மயானத்தில் முன்னோர் வழிபாடு உள்ளிட்ட சடங்குகளை தொடர்ச்சியாக செய்து வருகிறோம். எனவே எங்களது மயானத்தை மீட்டுத்தரவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.

ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

கொடுமுடி நகப்பாளையம் பகுதியை சேர்ந்த 75–க்கும் மேற்பட்டோர் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளோம். தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக நாங்கள் எந்தவித வேலைவாய்ப்பும் இல்லாமல் குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு தமிழக ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.’ என்று கூறப்பட்டு இருந்தது.

எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் திருத்தணி, திருநாவுக்கரசு ஆகியோர் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பேரவையின் அறிமுக விழா நடைபெற இருப்பதால் அதுபற்றிய விளம்பர பலகை, ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி மற்றும் நம்பியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடங்களில் வைக்க அனுமதி அளிக்கவேண்டும். என்று கூறப்பட்டு இருந்தது.

குடிநீர் வசதி

அந்தியூர் அருகே உள்ள மணல்காடு பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மற்றும் அறச்சலூர் கரட்டாங்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுக்களில், ‘தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக குடிக்க தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் ஊருக்கு குடிநீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.’ என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழ் மாநில காங்கிரஸ்சின் 4–வது மண்டல பகுதி தலைவர் அன்புத்தம்பி கொடுத்திருந்த மனுவில், ‘ஈரோடு கருங்கல்பாளையம் காந்திசிலை அருகில் உள்ள ஓம்காளியம்மன் கோவில் பின்புறம், சாக்கடை கால்வாய் வசதி இல்லாமல் சாக்கடை கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே ஓம்காளியம்மன் கோவில் பின்புறம் சாக்கடை கால்வாய் அமைக்கவேண்டும்.’ என்று கூறப்பட்டு இருந்தது.

337 மனுக்கள்

இந்திய மக்கள் சட்ட கழகம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘ஈரோடு வ.உ.சி. பூங்கா பின்புறம் குடியிருக்கும் சாலையோர மக்களுக்கு வீடுகட்டி கொடுக்கவேண்டும். காசிபாளையம் ஓடையை ஒட்டி இருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றவேண்டும். இயற்கை சூழலை அழிக்கின்ற எந்த ஒரு திட்டத்தையும் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தக்கூடாது’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 337 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வளர்ச்சி திட்ட இயக்குனர், அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் ராதாமணி, மாவட்ட வழங்கல் அதிகாரி சுப்பிரமணியம் உள்பட அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story