பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்கள் வந்து செல்லாததால் பயணிகள் அவதி


பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்கள் வந்து செல்லாததால் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 27 Feb 2017 11:00 PM GMT (Updated: 2017-02-28T01:59:01+05:30)

செய்யூரில் பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்கள் வந்து செல்லாததால் பயணிகள் அவதி போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் அறிவிப்பு

மதுராந்தகம்,

செய்யூர் பஸ் நிலையத்துக்கு உள்ளே பஸ்கள் வந்து செல்லாததால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதுபற்றி நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் அறிவித்து உள்ளனர்.

செய்யூர் பஸ் நிலையம்

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரில் உயர் நிலைப்பள்ளி, கல்லூரி, வார சந்தை, துணை சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்டவைகள் உள்ளன. செய்யூரை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ–மாணவிகள் செய்யூர் வந்துதான் உயர் நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலுகின்றனர்.

வார சந்தை மற்றும் துணை சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் செய்யூர் வந்து செல்கின்றனர்.

செய்யூரில் இருந்தும் தினமும் திரளான பொதுமக்கள் சென்னை, புதுச்சேரி, மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக செய்யூருக்கு சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், மதுராந்தகம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதற்காக செய்யூரில் பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கூரையுடன் கூடிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் அவதி

வெளியூர்களில் இருந்து செய்யூர் வரும் ஒரு சில அரசு பஸ்கள் மட்டும், அதுவும் குறிப்பிட்ட சில நேரங்களில்தான் பஸ் நிலையத்தின் உள்ளே வந்து செல்கின்றன. ஆனால் பெரும்பாலான பஸ்கள், பஸ் நிலையத்தின் உள்ளே செல்லாமல் சித்தாமூர்–எல்லையம்மன் கோவில் சாலையிலேயே நின்று பயணிகளை இறக்கவும், ஏற்றவும் செய்கின்றன.

மதுராந்தகம் பணிமனையில் இருந்து மதுராந்தகம்–செய்யூர் இடையே இயக்கப்படும் அரசு பஸ்களும் பஸ் நிலையத்தின் உள்ளே வந்து செல்வது இல்லை. இதனால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். அவர்கள், பஸ் நிலையத்தின் வெளியே கடும் வெயில், மழையில் காத்து நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்ட பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபடுவோம்

இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. செய்யூர் வரும் அனைத்து அரசு பஸ்களும் பஸ் நிலையத்தின் உள்ளே வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் பஸ் நிலையத்துக்குள் முட்புதர்களை வெட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story