லாலாபேட்டையில் மழை பெய்ய வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு


லாலாபேட்டையில் மழை பெய்ய வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு
x
தினத்தந்தி 27 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-28T02:18:52+05:30)

லாலாபேட்டையில் மழை பெய்ய வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு நடத்தினர்.

லாலாபேட்டை,

வறட்சியால் பயிர்கள் காய்ந்தன


தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனது. கரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மழையே பெய்யவில்லை என்ற நிலை உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் விவசாய பயிர்கள் காய்ந்து போயின. மக்கள் குடிப்பதற்கே தண்ணீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டையில் அதிக அளவு வாழை பயிரிடப்படுவது வழக்கம் ஆகும். அதன்படி இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்த தண்ணீரை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டது. மழை இல்லாததால், காவிரி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இதனால் லாலாப்பேட்டை பகுதி முழுவதும் வாழை மரங்கள் காய்ந்து வருகின்றன. மேலும் நெல், வெற்றிலை ஆகியவையும் காய்ந்து போய்விட்டன. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனையுடன் உள்ளனர்.

ஒப்பாரி


இந்த நிலையில் மழை வேண்டி லாலாப்பேட்டையில் பெண்கள் நூதன வழிபாடு நடத்தினர். இதில் பெண்கள் ஏராளமானவர்கள் லாலாபேட்டை மாரியம்மன் கோவில் முன்பு கூடினர். அங்கு அம்மனுக்கு பூஜை செய்தனர். இதைத்தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி ஒப்பாரி வைத்து அழுது, வழிபாடு நடத்தினர்.


Next Story