ரூ.100 கோடி மோசடி செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு


ரூ.100 கோடி மோசடி செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு
x
தினத்தந்தி 27 Feb 2017 11:00 PM GMT (Updated: 2017-02-28T02:19:52+05:30)

திருச்சியில் வீட்டுமனை வழங்குவதாக கூறி ரூ.100 கோடி மோசடி செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

திருச்சி,

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கே.எஸ். பழனிசாமி, மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, உரிய அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க அனுப்பி வைத்தனர்.

அப்போது தில்லைநகர், பாலக்கரை, உறையூர், வரகனேரி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து திரண்டு வந்திருந்த பொதுமக்கள் தில்லைநகரில் செயல்பட்டு வந்த ஜி.எம்.ஜி. ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது சரமாரியாக புகார் கூறினார்கள். அந்த நிறுவனம் தங்களிடம், லால்குடி அருகே மற்றும் சோமரசம்பேட்டை பகுதிகளில் வீட்டுமனை வழங்குவதாக கூறி தவணை முறையில் மாதாமாதம் பணம் வசூலித்ததாகவும் பணம் கட்டி முடித்த பின்னர் வீட்டுமனையை பதிவு செய்து தரவில்லை என்றும், தற்போது அந்த நிறுவனம் மூடிக்கிடக்கிறது. அதன் உரிமையாளர்களும், அதில் வேலை செய்தவர்களும் நிறுவனத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர் என புலம்பினார்கள். இன்னும் சிலரோ அந்த நிறுவனத்தில் மாத வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கட்டியதாகவும், அந்த பணத்துடன் அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் கூறினார்கள்.

ரூ.100 கோடி மோசடி


இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு நின்றதால் அவர்கள் அனைவரும் மரத்தடியில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் ஒரு மனு எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். அந்த மனுவில் ‘ஜி.எம்.ஜி. ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் புகார் கொடுக்க சென்றோம். பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் ஒரு நாளுக்கு 3 பேரிடம் மட்டுமே புகார் மனுக்களை வாங்க முடியும் என கூறிவிட்டார்கள். பாதிக்கப்பட்டவர்கள் 4 ஆயிரம் பேருக்கு மேல் இருப்பதால் வீண் காலதாமதம் ஏற்படும். மேலும் எங்களிடம் சுமார் ரூ.100 கோடி வரை மோசடி செய்த அந்த நிறுவனத்தினர் தப்பி ஓட வாய்ப்பாகி விடும் என்பதால் போலீஸ் விசாரணையை துரிதப்படுத்தி அதன் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்‘ என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பழனிசாமி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பாதிக்கப்பட்டவர்கள் மோசடி நிறுவனம் அவர்களுக்கு வழங்கிய 20 ரூபாய் பத்திரம், மாத தவணை பணம் வசூலித்ததற்கான ரசீதுகள் ஆகியவற்றுடன் ஒரே நேரத்தில் திரண்டு வந்து நின்றதால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எம்ஜிஆர் நற்பணி மன்றம் சார்பில் அதன் செயலாளர் கண்ணன் என்கிற ராமகிருஷ்ணன் கொடுத்த மனுவில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி மாநகரின் அடையாள சின்னங்களாக விளங்கும் மெயிகார்டுகேட், தெப்பக்குளம், காந்திமார்க்கெட் வளைவு, போர் நினைவு தியாகிகள் ஸ்தூபி, உப்பு சத்யாக கிரக ஸ்தூபி, பட்டவர்த் ரோடு காந்தி பூங்கா போன்ற வரலாற்று நினைவு சின்னங்களை முறையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

ரே‌ஷன் கடை திறக்க கோரிக்கை


அரியமங்கலம் ஜெகநாதபுரம் 29–வது வார்டு பகுதியில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட நியாயவிலைக்கடையை உடனடியாக மூடிவிட்டனர், அதனை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். திருச்சி விமான நிலைய பகுதி வயர்லஸ் சாலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்குள் அடுத்தடுத்து செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி மனித நேய மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் 10 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்த ரே‌ஷன் கடை கடந்த 25–ந்தேதி திறக்கப்பட்டது. ஆனால் அந்த பகுதியை சேர்ந்த சிலரது தூண்டுதலால் மீண்டும் மூடப்பட்டு உள்ளது. அந்த கடையை திறக்க உத்தரவிடவேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.

புவி காக்கும் இளைய தலைமுறைகள் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்ன் எடுக்கும் திட்டத்தை அந்த பகுதி மக்கள் ஒப்புதல் இன்றி செயல்படுத்த அனுமதிக்க கூடாது என கூறி மனு கொடுத்தனர். பள்ளி குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகளை தடுத்து நிறுத்த உரிய விசாரணை குழு அமைக்க வேண்டும் என கோரி மக்கள் கண்காணிப்பகம் என்ற அமைப்பின் சார்பில் அதன் மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரபு மனு கொடுத்தார். நேற்றைய கூட்டத்தில் மொத்தம் 606 மனுக்கள் பெறப்பட்டது.


Next Story