50 ஆண்டுகளாக தரம் உயரவில்லை: கவனிக்கப்படாத கருவடிக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி


50 ஆண்டுகளாக தரம் உயரவில்லை: கவனிக்கப்படாத கருவடிக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி
x
தினத்தந்தி 27 Feb 2017 9:30 PM GMT (Updated: 2017-02-28T02:23:18+05:30)

50 ஆண்டுகளாக தரம் உயரவில்லை: கவனிக்கப்படாத கருவடிக்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி

புதுவை மாநிலத்தில் பழமையான நகரங்களில் ஒன்று கருவடிக்குப்பம். உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. போதுமான இடவசதி இன்றி செயல்படும் இந்த பள்ளி கவனிக்கப்படாத நிலையிலே இருந்து வருகிறது.

தரம் உயர்த்த வேண்டும்

இந்த பள்ளிக்கூடம் செயல்பட்டு வரும் கருவடிக்குப்பம் நாகம்மன் கோவிலுக்கு அருகே புதுச்சேரி நகராட்சிக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. இந்த இடத்தில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. இந்த இடத்தை கல்வித்துறை கையகப்படுத்தி முட்புதர்களை அகற்றி அங்கு கருவடிக்குப்பம் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர அரசு நடவடிக்கை எடுப்பதுடன் உயர்நிலைப்பள்ளியாகவும் தரத்தை உயர்த்தினால் இந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வசதியாக இருக்கும்.

இங்கு பள்ளிக்கூடத்திற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதுடன் மீதம் உள்ள இடத்தில் பொது நூலகம், விளையாட்டுத் திடல், சமுதாய நலக்கூடம், பொழுதுபோக்கு பூங்கா, நடைபயிற்சி மேடை ஆகிய வசதிகளை அமைத்துக் கொடுத்தால் அந்த பகுதி மக்களுக்கு மிகுந்த பயன் அளிப்பதாக இருக்கும்.

சாலை ஓர கால்வாய்

கருவடிக்குப்பம் விரிவாக்க பகுதிகளான லட்சுமிநகர் விரிவு, நாகம்மன் நகர், சண்முகாநகர், பாரதிநகர், உள்பட அனைத்து பகுதிகளிலும் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை செப்பனிட வேண்டும். இந்த பகுதியில் சாலை ஓரவாய்க்கால் இல்லை. இதனால் ஒவ்வொரு வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் சாலையின் ஓரத்தில் தேங்கி நிற்கிறது. இது கொசு உற்பத்தியாவதற்கு வசதியாக இருக்கிறது. இதை தவிர்க்க இங்கு சாலை ஓர வாய்க்கால் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதர் மண்டிய கோவில் குளம்

கருவடிக்குப்பத்தில் உள்ள பிள்ளையார்கோவில் குளத்தில் புதர்களை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பக்கவாட்டு சுவர் அமைக்க வேண்டும். கிழக்கு கடற்கரை சாலை அருகில் ஒரு குட்டை உள்ளது. அது தற்போது குப்பைகள் கொட்டப்பட்டு மூடிக்கிடக்கிறது. இதனை தூர்வாரி சீரமைத்து மழைகாலங்களில் மழைநீரை தேங்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.


Next Story