எடியூரப்பா மீதான நில முறைகேடு வழக்குகள் ரத்து: ஆதாரங்களை திரட்ட கர்நாடக அரசு தீவிரம்


எடியூரப்பா மீதான நில முறைகேடு வழக்குகள் ரத்து: ஆதாரங்களை திரட்ட கர்நாடக அரசு தீவிரம்
x
தினத்தந்தி 27 Feb 2017 10:31 PM GMT (Updated: 27 Feb 2017 10:31 PM GMT)

எடியூரப்பா மீதான நில முறைகேடு வழக்குகளுக்கு வலுவான ஆதாரங்களை திரட்ட கர்நாடக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.

பெங்களூரு,

எடியூரப்பா மீதான நில முறைகேடு வழக்குகளுக்கு வலுவான ஆதாரங்களை திரட்ட கர்நாடக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.

குறிப்பேடு விவரங்கள்

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவிந்தராஜ் எம்.எல்.சி. வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதில் முக்கியமான ஒரு குறிப்பேடு(டைரி) சிக்கியது. அந்த குறிப்பேட்டில் உள்ள தகவல்களை எடியூரப்பா பகிரங்கமாக வெளியிட்டார். அதாவது காங்கிரஸ் மேலிடத்துக்கு சித்தராமையா உள்பட மந்திரிகள் பணம் வழங்கிய விவரங்கள் அந்த குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக எடியூரப்பா கூறினார்.

இந்த நிலையில் அந்த குறிப்பேடு தகவல்கள் ஆதாரப்பூர்வமாக கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் பகிரங்கமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை காங்கிரஸ் கட்சி மறுத்தது. அதேபோல் எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது பா.ஜனதா மேலிடத்துக்கு பணம் கொடுக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய குறிப்பேட்டை காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்டனர். இப்படி இந்த 2 கட்சிகளுடையே பெரிய பனிப்போர் நடந்து வருகிறது.

15 வழக்குகள் ரத்து

காங்கிரஸ் கட்சியை நெருக்கடிக்கு உள்ளாக்கிய எடியூரப்பா மீதான வழக்குகளுக்கு வலுவான ஆதாரங்களை திரட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது. எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது அவர் மீது சுமார் 25 நில முறைகேடு வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகளை லோக் அயுக்தா விசாரணை நடத்தி வருகிறது. இதில் 15 வழக்குகளை போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்துவிட்டது.

இதனால் எடியூரப்பா உற்சாகம் அடைந்தார். ஆனால் கர்நாடக ஐகோர்ட்டு அந்த வழக்குகளை ரத்து செய்து கூறியுள்ள தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. அதன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்குகளில் வலுவான ஆதாரங்களை திரட்டி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து முதல்-மந்திரி சித்தராமையா சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

திறமையான வக்கீலை...

இந்த நில முறைகேடு வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்தலாமா? அல்லது வேறு வகையில் ஆதாரங்களை திரட்டலாமா? என்பது பற்றி சட்ட ஆலோசனையை சித்தராமையா பெற்றுள்ளார். மேலும் இந்த வழக்கில் ஒரு நல்ல திறமையான வக்கீலை நியமித்து வழக்கை நடத்தவும் அரசு ஆலோசனை நடத்தியுள்ளது. அதனால் எடியூரப்பா மீதான மாநில அரசின் பிடி இறுகுகிறது. 

Next Story