பெங்களூருவில் பயங்கரம் 10-ம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை


பெங்களூருவில் பயங்கரம் 10-ம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை
x
தினத்தந்தி 27 Feb 2017 10:42 PM GMT (Updated: 27 Feb 2017 10:41 PM GMT)

பெங்களூருவில் அரசு பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது 10-ம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை செய்யப்பட்டான்.

பெங்களூரு,

பெங்களூருவில் அரசு பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது 10-ம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை செய்யப்பட்டான்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

அரசு பள்ளி ஆண்டு விழா

பெங்களூரு எலகங்கா போலீஸ் நிலையத்தின் அருகே அரசுக்கு சொந்தமான அரசு பள்ளி மற்றும் அரசு பி.யூ. கல்லூரி உள்ளது. இந்த அரசு பள்ளியில் நேற்று ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஆண்டு விழாவில் ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

இந்த வேளையில், மதியம் சுமார் 2 மணியளவில் திடீரென்று பள்ளி வளாகத்தில் மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறின்போது இருதரப்பினரும் ஒருவரையொருவர் விரட்டிச்சென்று மாறி மாறி தாக்கி கொண்டனர்.

குத்திக் கொலை

இந்த வேளையில், பள்ளிக்கு வெளியே உள்ள ரெயில் தண்டவாளத்தின் அருகே வைத்து ஒரு தரப்பை சேர்ந்த மாணவன் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஹர்ஷா (வயது 15) என்ற 10-ம் வகுப்பு மாணவனை குத்திவிட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஹர்ஷா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினான். இதை அங்கு இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், அவர்கள் உடனடியாக கத்திக்குத்து காயமடைந்த ஹர்ஷாவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஹர்ஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து அறிந்தவுடன் பள்ளி முன்பு ஏராளமானவர்கள் திரண்டனர்.

5 பேரிடம் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் எலகங்கா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பெங்களூரு கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நிம்பால்கர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அத்துடன், பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

ஆனாலும், எதற்காக மாணவர்கள் சண்டையிட்டு கொண்டனர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் 5 மாணவர்களை பிடித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சோகம்

அரசு பள்ளி ஆண்டுவிழாவின்போது 10-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நேற்று பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Next Story