காளியம்மன் கோவிலில் 12 பவுன் நகை மாயம் திருட்டை கண்டுபிடிக்க தேங்காய் உருட்டிய பொதுமக்கள்


காளியம்மன் கோவிலில் 12 பவுன் நகை மாயம் திருட்டை கண்டுபிடிக்க தேங்காய் உருட்டிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 28 Feb 2017 7:44 AM GMT (Updated: 28 Feb 2017 7:43 AM GMT)

காளியம்மன் கோவிலில் 12 பவுன் நகை மாயம் திருட்டை கண்டுபிடிக்க தேங்காய் உருட்டிய பொதுமக்கள்

எடப்பாடி,

கொங்கணாபுரம் அருகே காளியம்மன் கோவிலில் 12 பவுன் நகை மாயமானது. இந்த திருட்டை கண்டுபிடிக்க தேங்காய் உருட்டிய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில் நகை மாயம்

கொங்கணாபுரம் அடுத்த கோரணம்பட்டியில் நாச்சனூர் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 23-ந் தேதி நடைபெற்றது. அதற்காக சாமி உற்சவர் சிலை அலங்காரம் செய்யப்பட்டு 12 பவுன் காசு மாலை அணிவிக்கப்பட்டது. மறுநாள் மதியம் மஞ்சள் நீராட்ட ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் சாமி சிலை கோவிலுக்குள் வைக்கப்பட்டது. இரவில் பூசாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கோவிலிலேயே தங்கினர்.

பின்னர் 25-ந் தேதி கோவில் வரவு-செலவு கணக்குகளை பார்த்த பின் கோவில் பூசாரிகள் சாமிசிலையில் உள்ள நகையை எடுக்க சென்றனர். அங்கு சாமி மீது போடப்பட்டிருந்த 12 பவுன் நகையை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.

தேங்காய் உருட்டினர்

இதுகுறித்து ஊர்பொதுமக்களுக்கு தெரியவந்தது. பின்னர் திருட்டு பற்றி போலீசில் புகார் கொடுக்காமல், நகையை கண்டுபிடிக்க குறி சொல்பவர்களிடம் ஆலோசனை கேட்கலாம் என பொதுமக்கள் முடிவெடுத்தனர். இதையடுத்து மகுடஞ்சாவடியை அடுத்த எர்ணாபுரத்தை சேர்ந்த பூசாரியை அழைத்து வந்து தேங்காய் உருட்டி திருடனை கண்டுபிடித்து விடலாம் என கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று அந்த பூசாரியை அழைத்து வந்து கோவிலுக்கு முன்பு தேங்காயை வைத்து பூஜைசெய்யப்பட்டது. பின்னர் தேங்காயின் இரு பக்கங்களிலும் கையை வைத்து பிடிக்க அது உருண்டுகொண்டே சென்றது. கோவிலிலிருந்து உருண்டு சென்ற தேங்காய் மூலப்பாதை, கொங்கணாபுரம் ரவுண்டானா,

ரங்கம்பாளையம் கூட்டுறவு வங்கி வரை வந்து மீண்டும் திரும்பி கோவில் உள்ள பகுதிக்கு சென்று நின்றது. தேங்காயுடன் ஊர் பொதுமக்கள் 200 பேர் கூடவே நடந்து வந்தனர். தேங்காய் உருட்டி வந்த வினோதத்தை பலர் செல்போனில் படமெடுக்க முயன்றனர். அப்போது உடன் வந்தவர்கள் படம் எடுக்க கூடாது என்றும், படம் எடுத்தால் தேங்காய் உருண்டு செல்லாது என்றும் தடுத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும் எடப்பாடி போலீசார் கோரணம்பட்டிக்கு சென்று சாமி நகை திருட்டு போனது குறித்து விசாரணை நடத்தினர்.


Next Story