புதிய கட்டிடத்தை திறக்கக் கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
காட்பாடி காந்தி நகரில் உள்ள சட்டக்கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திறக்கக்கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்பாடி,
புதிய கட்டிடம்காட்பாடி காந்திநகரில் சட்டக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை திறக்கக்கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் கேட்டபோது, ‘‘இங்கு சுமார் 180 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றோம். சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கட்டும் பணி கடந்த 2012–ம் ஆண்டு தொடங்கி கடந்தாண்டு முடிவடைந்தது.
பழைய கட்டிடத்தில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான போதிய அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, இந்த புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வரிடம் நாங்கள் பலமுறை கோரிக்கை அளித்தோம்.
உள்ளிருப்பு போராட்டம்மேலும் இது குறித்து கடந்த 2–ந் தேதி தமிழக முதல்– அமைச்சருக்கு மாணவர்கள் சார்பில் கடிதம் அனுப்பி உள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, புதிய கட்டிடம் திறக்கும் வரை நாங்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’’ என்றனர். மாணவர்களிடம் கல்லூரி பேராசிரியர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் சமரசமாகாததால் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.