ரூ.1, 250 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்


ரூ.1, 250 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 1 March 2017 4:30 AM IST (Updated: 28 Feb 2017 7:11 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

திருவண்ணாமலை,

வேலை நிறுத்த போராட்டம்

வங்கி சீர்திருத்தம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு எதிராகவும், வங்கி ஊழியர்களுக்கு எதிராக எடுத்து வரும் மத்திய அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும், வங்கி துறையில் மத்திய அரசின் சீர்திருத்தங்களை கைவிட வேண்டும், வங்கி பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, வங்கி ஊழியர்களுக்கான சம்பளத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணம்நீக்க மதிப்பு காலத்தில் வங்கிகளில் கூடுதல் நேரம் பணியாற்றிய ஊழியர்களுக்கு தனி சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று ஒருநாள் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் வங்கி ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

மேலும் வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை அண்ணாசிலை அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பாக அகில இந்திய வங்கி ஊழியர்களின் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க துணை பொதுசெயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் இளஞ்செழியன் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பலர் பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து வங்கி ஊழியர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதில் பல்வேறு வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ரூ.1,250 கோடி பாதிப்பு

பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க துணை பொதுசெயலாளர் அன்பழகன் கூறுகையில், ‘‘வங்கி துறையில் மத்திய அரசு கொண்டு சீர்திருத்தங்களை கைவிடக்கோரி 9 சங்கங்கள் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 230 வங்கி கிளைகளில் பணிபுரியும் 1,287 வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதனால் வங்கிகளில் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் ரூ.1,250 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

வங்கி ஊழியர்களின் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பாலான வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வேலை நிறுத்த போராட்டத்தால் வங்கிக்கு வந்த பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.


Next Story