மாவட்டம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் 1,092 வங்கி ஊழியர்கள் பங்கேற்பு ரூ.800 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் 1,092 வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல்,
வேலைநிறுத்த போராட்டம்பண மதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தில் வங்கி ஊழியர்கள் பணியாற்றிய அதிகபடியான வேலை நேரத்திற்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், வராக்கடனை வசூலிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், வேண்டும் என்றே கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், வராக்கடன் ஏற்பட காரணமான உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மொத்தம் 414 பெண்கள் உள்பட 1,213 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் நேற்று 374 பெண்கள் உள்பட 1,092 பேர் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். 121 பேர் மட்டுமே பணிக்கு வந்து இருந்தனர். வங்கி மேலாளர்கள் சிலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால், சில வங்கிகள் மூடப்பட்டு இருப்பதை காண முடிந்தது. திறந்து வைக்கப்பட்ட வங்கிகளிலும் பணியாளர்கள் வராத காரணத்தால் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை.
ரூ.800 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிப்பு
இந்த போராட்டம் குறித்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் நாமக்கல் மாவட்ட கூட்டமைப்பின் அமைப்பாளர் கண்ணன் கூறியதாவது:– நாமக்கல் மாவட்டத்தில் 160 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பெரும்பாலான வங்கி ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. எனவே மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் சுமார் ரூ.800 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் தனியார் வங்கிகள் வழக்கம்போல் இயங்கின. ஏ.டி.எம். மையங்கள் சேவையும் பாதிக்கப்படவில்லை.