மகன் என உரிமை கோரி மேலூர் தம்பதி வழக்கு: மதுரை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் நேரில் ஆஜர்


மகன் என உரிமை கோரி மேலூர் தம்பதி வழக்கு: மதுரை ஐகோர்ட்டில் நடிகர் தனுஷ் நேரில் ஆஜர்
x
தினத்தந்தி 1 March 2017 4:45 AM IST (Updated: 28 Feb 2017 10:23 PM IST)
t-max-icont-min-icon

மகன் என உரிமை கோரி மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கில், நடிகர் தனுஷ் மதுரை கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.

மதுரை,

மேலூர் தம்பதி வழக்கு

மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன்–மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை, எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இரு தரப்பினரும் தனுஷின் பள்ளி அசல் சான்றிதழ்களை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் ஏற்கனவே நடிகர் தனுஷின் பள்ளி மாற்று சான்றிதழை இருதரப்பினரும் தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில், நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மாற்றுச்சான்றிதழில் அவரது உடலில் உள்ள அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை.

இதனையடுத்து மேலூர் தம்பதியர் தாக்கல் செய்துள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள மச்சம் உள்ளிட்ட அங்க அடையாளங்கள், நடிகர் தனுஷின் உடலில் உள்ளனவா என்பதை கண்டறிந்து அது தொடர்பாக தனுஷ் தரப்பு வக்கீல் அறிக்கை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

பணம் பறிக்கும் நோக்கில்...

இதற்கிடையே, கடந்த 24–ந்தேதி இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், “மேலூர் தம்பதியர் கூறியுள்ளது அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. தனுஷின் இடது காரை எலும்பின் மேல் ஒரு மச்சமும், இடது முழங்கையில் ஒரு தழும்பும் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அவரது உடலில் அதுபோன்ற எவ்வித அங்க அடையாளமும் இல்லை. தனுஷிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்“ என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு மேலூர் தம்பதியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “மனுதாரரின் உடலில் இருப்பதாக நாங்கள் குறிப்பிட்டுள்ள அங்க அடையாளங்களை எதிர்தரப்பினர் மாற்றி இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. வக்காலத்து மனுவில் இருப்பது மனுதாரரின் கையெழுத்து இல்லை. மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிறப்புச் சான்றிதழ் 1993–ம் ஆண்டு பெற்றதாக கூறப்பட்டுள்ளது. அதாவது மனுதாரர் பிறந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

மேலும் மனுவில், தனது தந்தை கிருஷ்ணமூர்த்தி அவரது பெயரை கஸ்தூரிராஜா என்று 2015–ம் ஆண்டு மாற்றியதாகவும், வெங்கடேஷ்பிரபு என்ற தனது இயற்பெயரை 2003–ல் தனுஷ் என்று மாற்றியதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2002–ம் ஆண்டில் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை‘ என்ற திரைப்படத்தின் ஆவணங்கள் அனைத்திலும் கஸ்தூரிராஜா என்றும் தனுஷ் என்றுமே பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர். இதன்படி பார்த்தால் அவர்களின் தகவல்கள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாக இருப்பது தெரியவருகிறது. அவர்கள் தாக்கல் செய்த குடும்ப அட்டை ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டவை“ என பதில் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

நேரில் ஆஜர்

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “வழக்கின் எதிர்மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள மச்சம் உள்ளிட்ட அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷின் உடலில் உள்ளனவா என்பதை கண்டறிய வேண்டி உள்ளது. எனவே நடிகர் தனுஷ் 28–ந்தேதி (நேற்று) நேரில் ஆஜராக வேண்டும்“ என்று உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலையில் நடிகர் தனுஷ் ஆஜரானார். அவருடன் கஸ்தூரிராஜா அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோரும் வந்திருந்தனர்.

மேலூர் தம்பதியர் தரப்பு வக்கீல் டைட்டஸ் ஆஜராகி, நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் அவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் அல்ல. பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்தவர். எனவே இதற்கு ஆட்சேபம் தெரிவித்து எங்கள் தரப்பில் மனு செய்யப்பட்டுள்ளது. அதையும் இந்த மனுவோடு சேர்த்து விசாரணைக்கு எடுக்க வேண்டும். மேலும் கஸ்தூரிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம் என்பதால் அந்த பகுதி தாசில்தாரால் பெறப்பட்ட சாதி சான்றிதழை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி அதை தனி மனுவாக தாக்கல் செய்யுங்கள், அல்லது இறுதி வாதத்தின் போது அதை சேர்த்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

சரிபார்ப்பு

பின்னர் நீதிபதியின் உத்தரவின் பேரில், நடிகர் தனுஷ் நீதிமன்ற பதிவாளர் இளங்கோவன் அலுவலகத்தில் ஆஜரானார். அங்கு, மதுரை பெரிய ஆஸ்பத்திரி டீன் வைரமுத்துராஜு மற்றும் டாக்டர்கள் ஆகியோர் தனுஷின் அங்க அடையாளங்களை சரிபார்த்தனர். சுமார் ½ மணி நேரம் இந்த சோதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை 2–ந்தேதிக்கு (நாளை) நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அதன்பின்னர் நடிகர் தனுஷ் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து கிளம்பி சென்றார். நடிகர் தனுஷ் வந்ததையொட்டி ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story