சம்பளம் வழங்காததை கண்டித்து மதுரை ரெயில் நிலைய சுகாதார ஆய்வாளர் அலுவலகம் முற்றுகை
மதுரை ரெயில்நிலையத்தில் வேலைபார்த்து வரும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்
மதுரை,
சம்பள பிரச்சினைமதுரை ரெயில்நிலையத்தில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள ரெயில்வே சுகாதாரத்துறை மூலம் தனியாருக்கு ஒப்பந்தம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை ரெயில்நிலையத்தில் சுமார் 93 துப்புரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் போதிய உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இதற்காக கடந்த டிசம்பர் மாதம் ரெயில்நிலையத்தில் உள்ள கோட்ட உதவி துப்புரவு ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சம்பளம் முறையாக வழங்கப்படும் என்று ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் கவனத்துக்கு சென்றது. அதனை தொடர்ந்து ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சம்பளத்தை விட தினக்கூலி பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும். தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். பிடித்தம் செய்ய வேண்டும். இந்த விதிகளை பின்பற்ற தவறும் ஒப்பந்ததாரரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உத்தரவிட்டார்.
முற்றுகைஆனால், இந்த உத்தரவுக்கு பின்னரும் கடந்த 2 மாதங்களாக மதுரை ரெயில்நிலையத்தில் வேலைபார்த்து வரும் ஓப்பந்த சுகாதார பணியாளர்களுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சி.ஐ.டி.யூ. அமைப்பு செயலாளர் நவுசாத் அலி தலைமையில் ஒப்பந்த சுகாதார பணியாளர்கள் நேற்று காலை மதுரை ரெயில்நிலையத்தில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை திடீரென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மதுரை கோட்ட ரெயில்வே முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.சாகு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சம்பள பிரச்சினை இன்னும் ஓரிரு நாட்களில் தீர்த்து வைக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
இந்த திடீர் முற்றுகை போராட்டத்தால் மதுரை ரெயில்நிலையத்தின் 1–வது பிளாட்பாரம் நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது.