ஓமலூரில் சரக்கு ரெயில் மீது ஏறிய வாலிபரை மின்சாரம் தாக்கியது உடல் கருகிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
ஓமலூரில் சரக்கு ரெயில் மீது ஏறிய வாலிபரை மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகிய அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஓமலூர்,
மின்சாரம் தாக்கியதுசேலம் ரெயில் நிலையத்தில் இருந்து மேட்டூர் அனல் மின்நிலையம் நோக்கி நேற்று அதிகாலை நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ரெயில் புறப்பட்டுச் சென்றது. ஓமலூர் ரெயில் நிலையம் வந்தவுடன் சிக்னலுக்காக காத்து நின்ற அந்த ரெயில் பின்பு மெதுவாக நகர்ந்தது.
அப்போது 27 வயதுடைய ஒரு வாலிபர் திடீரென சரக்கு ரெயிலின் என்ஜின் மீது ஏறினார். எதிர்பாராதவிதமாக அவரது கை மேலே இருந்த உயர்அழுத்த மின்கம்பியில் பட்டது. இதனால் மின்சாரம் தாக்கிய அந்த வாலிபர் ரெயில் பெட்டி மீது தூக்கி வீசப்பட்டார்.
அவரது உடலில் தீப்பிடித்ததால் அவர் கருகினார். அந்த தீ பரவியதில் ரெயில் பெட்டியில் நிலக்கரி மீது போர்த்தப்பட்ட பிளாஸ்டிக் பாயும் எரிந்தது.
இதையடுத்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரெயில் நிலையத்தில் இருந்த ஊழியர்கள் தீயை அணைத்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவரா?மேலும், ஓமலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உடல் கருகிய நிலையில் இருந்த அந்த வாலிபரை மீட்டு, சிகிச்சைக்காக ஓமலூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சேலம் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் இந்தியில் பேசியது தெரியவந்தது.
எனவே, அவர் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரிவித்த போலீசார் அவர் எதற்காக ரெயில் மீது ஏறினார்? மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.