என்ஜினீயரை தாக்கிய தனியரசு எம்.எல்.ஏ: வழக்குப்பதிவு செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
காங்கேயம் அருகே வாக்குவாதத்தை செல்போனில் படம் பிடித்த என்ஜினீயரை உ.தனியரசு எம்.எல்.ஏ. தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆலாம்பாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பழனியாண்டவர் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதனால் கோவிலில் கூட்டம் அலை மோதியது. இந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலை 6 மணிக்கு உ.தனியரசு எம்.எல்.ஏ. வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் தனியரசு எம்.எல்.ஏ. விடம் சென்று “காங்கேயம் பகுதியில் சாலைகள் பழுதான நிலையில் உள்ளதாகவும், எனவே உடனடியாக சாலையை செப்பனிட வேண்டும்“ என்றும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு தனியரசு எம்.எல்.ஏ. “தற்போது நிதி இல்லை’’ என்றும், பிறகு பார்க்கலாம் என்றும்“ கூறினார். இதைத்தொடர்ந்து எம்.ஏல்.ஏ.வுக்கும், கோரிக்கை விடுத்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதத்தை பக்கத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த ஆலம்பாடியை சேர்ந்த என்ஜினீயர் செல்வகார்த்திகேயன் (வயது 25) என்பவர் தனது செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்தார்.
என்ஜினீயர் மீது தாக்குதல்இதனால் ஆத்திரம் அடைந்த தனியரசு எம்.எல்.ஏ. என்ஜினீயர் செல்வகார்த்திகேயனின் கையை பிடித்து திருகி தாக்கி உள்ளார். மேலும் அவர் வைத்து படம் பிடித்த செல்போனையும் பறித்துக்கொண்டதாக தெரிகிறது. பின்னர் என்ஜினீயரை எம்.எல்.ஏ.வின் உதவியாளர்கள் சிலர், அங்கிருந்து மறைவான பகுதிக்கு இழுத்து சென்று ஒதுக்குப்புறத்தில் வைத்து, சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் செல்வகார்த்திகேயனின் மண்டை உடைந்து ரத்தம் வடிந்தது. இதனால் வலி தாங்கமுடியாமல் அவர் அலறி துடித்தார். இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் செல்வகார்த்திகேயனை மீட்டு காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாலை மறியல்இதற்கிடையில் கோவில் திருவிழாவில் செல்வகார்த்திகேயனை, உ.தனியரசு எம்.எல்.ஏ. தாக்கி விட்ட தகவல் அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் வேகமாக பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று இரவு 8.30 மணிக்கு சென்னிமலை–காங்கேயம் சாலையில் அமர்ந்து திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் 2 பக்கமும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையாக வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
இது பற்றிய தகவலறிந்ததும் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி(பொறுப்பு), ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், காங்கேயம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
வழக்குப்பதிவு செய்வதாக போலீசார் உறுதிஆனால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனியரசு எம்.எல்.ஏ. இங்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் மறியலை கைவிடுவோம்“ என்று கூறினர். இதனால் சாலை மறியல் போராட்டம் நீடித்தது. இதனால் காங்கேயம்–சென்னிமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் தனியரசு எம்.எல்.ஏ.மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.