குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 1 March 2017 4:00 AM IST (Updated: 1 March 2017 4:51 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிகுடங்களுடன் மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் தட்டுப்பாடு

மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் பருவமழை சரிவர பெய்யாததால் ஏரி, குளங்கள் மழையின்றி வறண்டு காணப்படுகிறது. இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் கிராம பகுதிகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால் பெரும்பாலான ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மைவாடி ஊராட்சியை சேர்ந்த செல்வபுரம் பகுதியில் பல நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

முற்றுகை

இதனைத்தொடர்ந்து பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சிவக்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் குடிநீர் பிரச்சினை தீர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறுகையில் ‘‘வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வரும் கோடையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டால் கால்நடைகளையும் விற்பனை செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டு வருகிறது. எனவே போராட்டங்கள் நடைபெறும் நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளை தற்காலிகமாக தள்ளி வைப்பதைவிட நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

வீணாகும் குடிநீர்

முதல்கட்டமாக பல பகுதிகளில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மேலும் நவீன முறையில் நீரோட்டங்களை கண்டறிந்து புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இனிவரும் காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க மழைநீர் வடிகால்களை தூர்வாருதல், ஏரி, குளங்களை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தனர். மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தில் சுமார் 1 மணிநேரம் நீடித்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story